மியான்மரில் ராணுவத்தின் கொலைவெறி: போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் பங்கெடுத்து தலையில் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் மியா த்வதே த்வதே கைங் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த இரு வாரங்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேபிடாவ், யாங்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதில் நேபிடாவ் பகுதியில் போராட்டம் வன்முறையாக வெடித்தது.
கடந்த வாரம் தலைநகர் நேபிடாவில் ராணுவத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் பொதுமக்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இதில் பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் 20 வயதான மியா த்வதே த்வதே கைங் தலையில் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மியா த்வதே த்வதே கைங் மரணம் அடைந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்துக்கு எதிராக மியான்மரில் நடந்து வரும் போராட்டத்தில் ஏற்பட்ட முதல் மரணம் இதுவாகும்.
மியா த்வதே த்வதே கைங்ன் மரணத்தை தொடர்ந்து அவருக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இளம்பெண் மியா த்வதே த்வதே கைங் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் எனக் கூறி, மருத்துவமனை ஊழியர்களுக்கு கடும் அழுத்தம் அளிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, போராட்டத்தில் ஈடுபட்டு காயங்களுடன் சிகிச்சையில் இருந்த சிலர், உயிர் பயம் காரணமாக மருத்துவமனை விட்டே வெளிய்யேறும் சம்பவமும் நடந்தது என மருத்துவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது.
மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
