காபூலில் இருந்து வெளியேறும் முன்னர் ’சம்பவம்’ செய்த அமெரிக்க ராணுவம்: தாலிபான்களுக்கு பேரிடி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் மொத்தமாக வெளியேறும் முன்னர், விமானங்கள், டாங்கிகள், உயர் ரக ராக்கெட் தடுப்பு அம்சங்கள் உள்ளிட்ட அனைத்தையும் செயலிழக்க செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீண்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்கா உட்பட நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியுள்ளன.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், தாலிபான்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், மொத்த வெளிநாட்டு துருப்புகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற கடைசி காலக்கெடுவாக ஆகத்து 31ம் திகதி என விதிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் தற்போது அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் இருந்து மொத்தமாக வெளியேறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் முன்னர் சுமார் இரண்டு வார காலம் அமெரிக்க ராணுவ தொழில்நுட்ப பிரிவினர், இதுவரை ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தி வந்த மொத்த பாதுகாப்பு அம்சங்களையும் செயலிழக்க செய்துவிட்டு வெளியேறியதாக தெரிய வந்துள்ளது.
காபூல் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 73 விமானங்கள். தலா 10 லட்சம் டொலர் மதிப்புள்ள நூறுக்கும் அதிகமான ஆயுத வாகனங்கள் உள்ளிட்டவைகளை செயலிழக்க செய்துள்ளனர். அந்த விமானங்கள் இனி பறக்காது எனவும், எவருக்கும் அந்த தொழில்நுட்பங்களை இயக்கவும் முடியாது என ஜெனரல் கென்னத் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி காபூல் விமான நிலையத்தை ராக்கெட் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, பயன்படுத்தி வந்த உயர் ரக பாதுகாப்பு அம்சங்களையும் அமெரிக்க ராணுவம் செயலிழக்க செய்துள்ளது.
திங்கட்கிழமை காபூல் விமான நிலையத்தை குறிவைத்து 5 ராக்கெட்டுகள் ஏவப்பட்ட நிலையில், இந்த உயர் ரக பாதுகாப்பு திட்டத்தை பயன்படுத்தியே அமெரிக்கா முறியடித்துள்ளது.
காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் கடைசி விமானமும் வெளியேறும் வரையில் இந்த பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் செயலில் இருந்துள்ளன. உள்ளூர் நேரப்படி ஆகத்து 30ம் திகதி மதியத்திற்கு பிறகு 3.29 மணிக்கு காபூலில் இருந்து அமெரிக்காவின் சி-17 விமானம் துருப்புகளுடன் வெளியேறியது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை துப்பாக்கி முனையில் கைப்பற்றிய பின்னர் ஆகத்து 14ம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கையின் ஊடாக 1,22,000 பேர்களை அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றியுள்ளது.
அமெரிக்க துருப்புகள் வெளியேறிய பின்னர் காபூல் விமான நிலையத்தின் மொத்த பொறுப்பும் தாலிபான் வசம் வந்துள்ளது.
அமெரிக்க துருப்புகள் வெளியேறியதன் பின்னர் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாகவே தாலிபான்கள் தரப்பு தெரிவித்துள்ளது.