53 பேருடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பலின் நிலை தொடர்பில் வெளியான அதிகாரப்பூர்வ தகவல்! உறுதிப்படுத்திய ஜனாதிபதி
53 பேருடன் மாயமான இந்தோனேசியாவுக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலின் நிலை குறித்து அந்நாட்டு ஜனாதிபதி அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளார்.
புதன்கிழமை பாலி தீவுக்கு அருகில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்தோனேசிய இராணுவத்திற்கு சொந்தமான கே.ஆர்.ஐ.நங்கலா 402 என்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயமானது.
மாயமான கப்பலை தேடும் நடவடிக்கையில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டன.
இந்நிலையில், பாலிக்கு அருகே மாயமான கே.ஆர்.ஐ.நங்கலா 402 என்ற நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கிவிட்டது என இந்தோனேசிய கடற்படை உறுதிபடுத்தியதாக அந்நாட்டு ஜனாதிபதி Joko Widodo அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இராணுவமும் கடற்படையும் கே.ஆர்.ஐ.நங்கலா 402 நீர்மூழ்கிக் கப்பலின் நிலையை ‘தொடர்பை இழந்துவிட்டது’ என்பதிலிருந்து ‘மூழ்கிவிட்டது’ என்று மாற்றியுள்ளனர் என Widodo பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
இந்தோனேசியர்கள் அனைவரும் இந்த துயரம் குறித்து எங்கள் ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்துகிறோம், குறிப்பாக நீர்மூழ்கிக் கப்பல் குழுவினர்களின் குடும்பத்தினருக்கு என Widodo இரங்கல் தெரிவித்தார்.
அதே நேரத்தில், கப்பலில் இருந்த 53 பேரில் உயிர்பிழைத்தவர்களை கண்டுபிடிப்பதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை என்று கடற்படை தலைவர் Yudo Margono வலியுறுத்தியுள்ளார்.