கர்நாடக மலைப்பகுதியில் 14 வயது கேரள சிறுமிக்கு நேர்ந்த சோகம்: சடலமாக மீட்கப்பட்ட உடல்
கர்நாடக மலைப் பகுதியில் காணாமல் போன 14 வயது சிறுமியின் உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
காணாமல் போன சிறுமி
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஸ்ரீ நந்தா என்ற 14 வயது சிறுமி தன்னுடைய 40 உறவினர்களுடன் கர்நாடகா மாநிலம் சந்திரத்ரோணா மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
ஏப்ரல் 7ம் திகதி மாலை 3 மணியளவில் தனியார் ஜீப்கள் மூலம் மலைப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர் . பின்னர் அங்குள்ள சுற்றுலா தளத்திற்கு செல்வதற்காக நந்தா குடும்பத்தினர் மலையேற்றத்தை தொடங்கியுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் நந்தா உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாலை 6 மணி அருகில் மணிக்யதாரா பகுதியில் வைத்து நந்தா காணாமல் போனதை உறவினர்கள் அறிந்துள்ளனர்.
உறவினர்கள் சுற்றி தேடி பார்த்தும் நந்தாவை கண்டுபிடிக்க முடியாததால், உடனடியாக பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி
இதையடுத்து கடினமான மலைப் பகுதியில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய பொலிஸார் கயிறுகளின் உதவியுடன் பள்ளத்தாக்குகளில் இறங்கி தேடுதல் பணியை நடத்தினர்.
நான்கு நாட்கள் தீவிர தேடுதலுக்கு பிறகு சுமார் 1500 அடி ஆழத்தில் சிறுமி நந்தாவின் உடலை மீட்பு படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

சிறுமி பள்ளத்தாக்கில் தவறி விழுந்து இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டாலும், அவரது குடும்பத்தினர் சிறுமி நந்தா கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் சிறுமியின் பெற்றோர் கைபேசியை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |