4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன கர்ப்பிணி தாய்: மெக்சிகோ மண் ரோட்டில் சடலமாக மீட்பு
மெக்சிகோவில் காணாமல் போன தாய் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன தாய்
இந்தியானாவில்(Indiana) வசித்து வந்த 30 வயது தாய் மகாலா பெண்டலி(Makala Pendley) தனது 7 குழந்தைகளுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக இந்தியானா பொலிஸால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 8ம் திகதி காணாமல் போன மகாலா பெண்டலி மொக்சிகோவின் Chiapas மாநிலம் Zanicantan பகுதியில் உள்ள மண் ரோட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், மகாலா பெண்டலி தலையில் தாக்கியதால் ஏற்பட்ட மூளை காயம் காரணமாக உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது.

சடலம் கண்டெடுக்கப்பட்ட 8 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பு தான், மகாலா பெண்டலி-யின் உடல் அப்பகுதியில் வீசப்பட்டு இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
மகாலா காணாமல் போன போது அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்ததாக அவரது சகோதரி மெளரிகா லம்பேர்ட் தெரிவித்துள்ளார்.
பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தைகள்
மகாலா உடன் காணாமல் போன 7 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக சியாபாஸ் மாநில அரசு வழக்கறிஞர் ஜார்ஜ் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 7 குழந்தைகளும் தற்போது உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பில் இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் முதன்மை குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் மகாலாவின் துணைவர் ஜோசப் N பொலிஸாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மகாலா கடத்தப்பட்டது மற்றும் கொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |