12 ஆண்டுகளுக்கு முன் மாயமான மகன்: பிரித்தானியப் பெண்ணுக்கு நடந்துள்ள கிறிஸ்துமஸ் அற்புதம்...
12 ஆண்டுகளுக்கு முன் மாயமான தனது மகன் பிரான்சில் இருப்பதாக கிடைத்த செய்தியால் மகிழ்ச்சியில் பூரித்துப்போயிருக்கிறார் ஒரு பிரித்தானியத் தாய்.
மாயமான பிரித்தானியர்
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் வாழ்ந்துவந்த நிக்கோலஸ் (Nicholas) என்னும் பிரித்தானியர், 2000ங்களில் தனது வேலை போனதையடுத்து திடீரென மாயமாகியிருக்கிறார்.
மகனைக் காணாமல் தவித்துப்போன அவரது தாய் ஜாய்ஸ் (Joyce Curtis) பொலிசாரிடம் புகாரளித்திருந்த நிலையில், பொலிசார் அவரைத் தீவிரமாக தேடிவந்தார்கள். 2010ஆம் ஆண்டு நிக்கோலஸ் பிரான்ஸ் நாட்டிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைக்க, ஜாய்ஸும் அவரது கணவரும் மகனைக் காண்பதற்காக பிரான்சுக்கு ஓடியிருக்கிறார்கள்.
Provided by Daily Mail
இரண்டாவது முறை மாயமான மகன்
மகன் குணமடைந்து வீட்டுக்கு வருவான் என பெற்றோர் காத்திருக்க, நிக்கோலஸ் மீண்டும் மாயமாகியிருக்கிறார். ஆண்டுகள் கடந்து செல்ல மகனிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காததால், கொரோனாவால் மகன் இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டார் ஜாய்ஸ். ஆனால், கடந்த திங்கட்கிழமை பாரீஸிலுள்ள பிரித்தானிய தூதரகத்திலிருந்து ஜாய்ஸுக்கு ஒரு செய்தி வந்துள்ளது.
அது என்னவென்றால், நிக்கோலஸ் பிரான்சிலுள்ள மருத்துவமனை ஒன்றில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதுதான். ஜூலை மாதம் கணவர் இறந்துபோன நிலையில் கவலையில் ஆழ்ந்திருந்த ஜாய்ஸுக்கு, காணாமல்போய் 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மகன் கிடைத்துள்ள செய்தி பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது.
தொலைபேசியில் மகனுடன் பேசியபோது வீட்டுக்கு வருவாயா என நிக்கோலஸிடம் கேட்டாராம் ஜாய்ஸ். அவரும் வருவேன் என்று கூறியிருக்கிறாராம். ஆக, இது எனக்கு நடந்த கிறிஸ்துமஸ் அற்புதம் என்று கூறி புளகாங்கிதம் அடைந்துள்ளார் ஜாய்ஸ்.
Provided by Daily Mail