ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தும் வலிமை கொண்டவர் மோடி! சரத்குமாரின் பிரச்சார பேச்சு
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கும், கச்சத் தீவை மீட்பதற்கும் பிரதமர் மோடியால் மட்டும் தான் முடியும் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
ராதிகா பிரச்சாரம்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சரத்குமார் மற்றும் அவரது மனைவி வேட்பாளர் ராதிகா இருவரும், விருதுநகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில், சாத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அப்போது ராதிகா சரத்குமார் பேசுகையில், "நான் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து என்றால் நம்பிக்கை, நேர்மை தான். அதேபோல அரசியலிலும் எனக்கு நேர்மை நாணயம் உண்மை இருக்க வேண்டும்.
இந்த தொகுதியில் நான் வெற்றி பெற்றால் உங்களது குறைகளை நிறைவேற்றுவேன். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை மோடி சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். எனக்கு வாய்ப்பளித்து தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்" என்றார்.
சரத்குமார் பேசியது
பிரச்சாரத்தில் சரத்குமார் பேசும் போது, "பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியை குறை சொல்ல காரணம் இல்லாததால் பிரதமரை தரைக்குறைவாக விமர்சிக்கின்றனர். அதை பொறுத்துக் கொள்ள முடியாது. அப்பா முதலமைச்சர் என்பதால் மகனை அமைச்சராக்கியுள்ளார்.
பிரதமர் மோடியை 29 பைசா என்று சொல்லும் உங்களை முப்பதாயிரம் கோடி என்று கூறுவதா? 1974 -ல் கச்சத்தீவை இந்திராகாந்தி தாரை வார்த்த போது வேடிக்கை பார்த்தவர் கருணாநிதி.
நாட்டில் உள்ள ஒரு பகுதியை மற்ற நாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனுமதியை வாங்க வேண்டும். ஆனால், அப்போது இருந்த காங்கிரஸ் அரசு அதை செய்யவில்லை. கச்சதீவை பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு அருகதை இல்லை.
ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்துவதற்கு தகுதியான தலைவன் என்றால் அது இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான். அதேபோல, கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கும் அவரால் மட்டுமே முடியும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |