ஒரு சிறந்த கிரகத்திற்கு இது பெரிதும் உதவும்: இத்தாலி பிரதமரை சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி
ஜி20 உச்சி மாநாட்டில் இத்தாலி பிரதமரை சந்தித்தது மகிழ்ச்சி என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ஜி20யின் 19வது உச்சி மாநாடு தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பேசிய அவர், "சர்வதேச மோதல்களால் ஏற்பட்டுள்ள உணவு, எரிபொருள் மற்றும் உர நெருக்கடி, உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
எனவே, உலகளாவிய தெற்கின் சவால்கள் மற்றும் முன்னுரிமைகளை நாம் மனதில் கொள்ளும்போது மட்டுமே நமது விவாதங்கள் வெற்றிபெற முடியும்" என சமூக உள்ளடக்கம் மற்றும் பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம் என்ற அமர்வில் கூறினார்.
இருநாடுகளின் உறவுகளை வலுப்படுத்த
மேலும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை (Giorgia Meloni) சந்தித்து இருநாடுகளின் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அத்துடன் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "ரியோ டி ஜெனிரோ ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உறவுகளை ஆழப்படுத்துவதை மையமாக வைத்து எங்களது பேச்சுக்கள் அமைந்தன.
கலாச்சாரம், கல்வி மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றியும் நாங்கள் பேசினோம். இந்தியா - இத்தாலி நட்புறவு ஒரு சிறந்த கிரகத்திற்கு பெரிதும் உதவும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |