முகமது ஷமி பாவம் செய்துவிட்டார்: நோன்பை குறிப்பிட்டு விமர்சித்த மதகுருவுக்கு கடும் எதிர்ப்பு
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, நோன்பு வைக்காமல் விளையாடிவிட்டார் என்ற மதகுருவின் விமர்சனத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
முகமது ஷமி
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி (Mohammed Shami) 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆனால், முகமது ஷமி நோன்பு வைக்காமல் விளையாடியது தவறு என்று அகில இந்திய முஸ்லீம் ஜமாஅத்தின் தலைவர் ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி குற்றம்சாட்டினார்.
அவர், "நோன்பு வைப்பது என்பது ஒவ்வொரு இஸ்லாமியர்களின் கடமை. இதனால் நோன்பு வைக்காமல் முகமது ஷமி பாவம் செய்துவிட்டார். உடல்நலம் ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒரு ஆணோ, பெண்ணோ நோன்பு வைக்காமல் இருப்பது மிகப்பெரிய குற்றமாகும்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஷமி, நோன்பு வைக்காமல் போட்டியின்போது குடிநீர் குடித்திருக்கிறார். இதை பலரும் பார்த்திருக்கிறார்கள். அவரால் விளையாட முடிகிறது என்றால் அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றுதான் அர்த்தம்.
அப்படி இருக்கும்போது அவர் நோன்பு வைக்காமல் தண்ணீர் குடித்தால் ஒரு தவறான முன்னுதாரணமாக ஷமி விளங்குகிறார். இந்த தவறை ஷமி மீண்டும் செய்யக்கூடாது. அவர் இறைவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என விமர்சித்தார்.
விமர்சனத்திற்கு பதில்
இந்த நிலையில், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் அறிஞரும் நிர்வாக உறுப்பினருமான மௌலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹ்லி, "கிரிக்கெட் வீரர் ஒருவர் சுற்றுப்பயணத்தில் இருப்பதாகவும், பயணிப்பவர்களுக்கு சலுகைகள் உள்ளன. பயணம் செய்பவர்கள் ரம்ஜான் நோன்பைத் தவிர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஒருவர் பயணத்தில் இருந்தாலோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ, நோன்பை அனுசரிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது என்று குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. முகமது ஷமியைப் பொறுத்தவரை, அவர் ஒரு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.
எனவே, நோன்பை அனுசரிக்காமல் இருக்க அவருக்கு விருப்பம் உள்ளது. அவரைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை" என கூறியுள்ளார். அதேபோல் ஷமியின் உறவினர்கள், பயிற்சியாளர் என பலரும் மதகுருவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |