பாலியல் கூட்டாளிகளை குறைத்துக் கொள்ளுங்கள: WHO வெளியிட்ட குரங்கம்மை வழிகாட்டுதல்
உலகம் முழுவதும் குரங்கம்மை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றுநோயைப் போல், இப்போது குரங்கம்மை வைரஸ் பரவும் என்கிற பயம் உலகத்தை ஆக்கிரமித்துள்ளது. பல நாடுகளில் ஆயிரக்கணக்கானோருக்கு குரங்கம்மை தொற்று பதிவாகியுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு (WHO) சில பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
தற்போது, குரங்கம்மை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 'Gay' (ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள்) குழுக்களுக்கு முக்கிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதாவது, அவர்கள் தங்கள் பாலியல் கூட்டாளிகளைக் குறைத்துகொண்டு கட்டுப்பாடுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது, இது அவர்களை ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று கூறியுள்ளது.
கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus குரங்கம்மை வைரஸை உலக சுகாதார அவசரநிலையாக அறிவித்தார்.
ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், குரங்கம்மை தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு நோய் தொற்றுவதற்கான அபாயத்தைக் குறைப்பது தான் சிறந்த வழி என்று கூறினார்.
உலக சுகாதார நிறுவனம் 78 நாடுகளில் இருந்து 18,000-க்கும் மேற்பட்ட குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக WHO தெரிவித்துள்ளது. மொத்த பதிப்புகளில் 70 சதவீதம் ஐரோப்பாவில் பதிவாகியுள்ளன, 25 சதவீதம் அமெரிக்கா முழுவதும் பதிவாகியுள்ளன.
பாதிப்புகள் அதிகரித்துள்ள போதிலும், குரங்கம்மை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது குறைவாகவே உள்ளது. இதுவரை 5 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக WHO தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவீதம் பேர் மற்ற ஆண்களுடன் உடலுறவில் ஈடுபடுபவர்கள் என்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த நோயின் முக்கிய அறிகுறி கொப்புள சொறி ஆகும், ஆனால் இது இன்னும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று (STI) என பெயரிடப்படவில்லை.
WHO "யாரும் குரங்கு காய்ச்சலுக்கு ஆளாகலாம்" என்றும் அந்த நோய் ஒரு சமூகத்தை மட்டுமே பாதிக்கிறது என்று நம்புவது ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் வலியுறுத்தியுள்ளது.