நியூசிலாந்தில் இலங்கை தாக்குதல்தாரி 3 ஆண்டு சிறையில் செய்த அட்டூழியம்: அதிகாரிகள் வெளியிடும் புதிய தகவல்
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் தாக்குதல் முன்னெடுத்த இலங்கையர் தடுப்பு காவலில் இருந்த மூன்றாண்டுகள் தொடர்பில் புதிய தகவல்களை அதிகாரிகள் தரப்பு வெளியிட்டுள்ளனர்.
மேற்கு ஆக்லாந்தில் உள்ள கவுன்டவுன் லின்மாலுக்குள் புகுந்து 6 பேரை கத்தியால் குத்திய அஹமது ஆதில் முகமது சம்சுதீன் என்ற 32 வயது இலங்கை தமிழர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குறித்த நபர் சுமார் மூன்றாண்டு காலம் தடுப்புக்காவல் சிறையிலும் இருந்துள்ளார். மட்டுமின்றி, வணிக வளாகத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கும் 7 வாரங்கள் முன்னரே அவர் விடுதலை பெற்றுள்ளதகாவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் சிறையில் இருந்த மூன்றாண்டுகளில் அவரது நடவடிக்கை தொடர்பில் அதிகாரிகள் தரப்பு புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் Mt Eden சிறையில் அடைபட்டு இருந்தபோது, சிறை அதிகாரிகள் இருவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு கட்டத்தில் அதிகாரிகளை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, பல சந்தர்ப்பங்களில் அவர் சிறுநீர் மற்றும் மலத்தை சிறை ஊழியர்கள் மீது வீசியும் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர்களை அச்சுறுத்தி தாக்கியதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மூன்றாண்டுகளின் கடைசி கட்டத்தில் அதிக பாதுகாப்பு மிகுந்த ஆக்லாந்து சிறைக்கு சம்சுதீன் மாற்றப்பட்டுள்ளார். இங்கு உளவியல் ஆலோசனைகள் அளிக்க முன்வந்த போதும் அவர் அதை நிராகரித்ததாகவே கூறப்படுகிறது. மேலும் உளவியலாளர்களை நெருங்கவும் அவர் அனுமதிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
மேலும், தமக்கு நண்பர்கள், உற்றார் உறவினர்கள் ஏதும் இல்லை எனவும், அதனாலையே மசூதி ஒன்றில் தங்கி வந்ததாகவும் அவர் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், மீண்டும் மசூதிக்கு செல்ல தாம் விரும்பவில்லை எனவும், இது தொடர்பில் தமக்கு உதவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் இறுதியில் மசூதிக்கு செல்லவே சம்சுதீன் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் நிர்வகிக்க மிகவும் கடினமான நபராக இருந்தார், மேலும் நன்னடத்தை ஊழியர்களிடம் பகிரங்கமாக பகைமையுடன் நடந்து கொண்டார் என்றே அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.