உக்ரைனுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க தயார்: ரஷ்யா வெளிப்படுத்திய விருப்பம்
உக்ரைனுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்
உக்ரைனுடன் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க ரஷ்யா தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தகவல் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடன் எந்த இடத்தில் பேச்சுவார்த்தை தடைபட்டதோ அந்த இடத்தில் இருந்து பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ரஷ்யா விருப்பம் கொண்டு இருப்பதாக வெளியுறவு அமைச்சக நிகழ்வு ஒன்றில் அமைச்சர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

உக்ரைனுடனான பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஐரோப்பிய நாடுகளின் மத்தியஸ்த செயல்பாடுகள் குறித்து கடுமையான அதிருப்தியையும் லாவ்ரோவ் வெளிப்படுத்தினார்.
உக்ரைன் - ரஷ்யா இடையில் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட அனைத்து மத்தியஸ்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்ததாகவும், இனி பிரஸ்ஸல்ஸில் இருந்து வரும் எந்தவொரு ஆலோசனைகளையும் பெரிதாக எடுத்துக் கொள்ள போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
முந்தைய பேச்சுவார்த்தைகள் முடங்கியதற்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என்று குற்றம் சாட்டிய லாவ்ரோவ், லண்டன், பெர்லின், பிரஸ்ஸல்ஸ் மற்றும் பாரிஸ் ஆகிய நாடுகள் வேண்டுமென்றே இருதரப்பிற்கும் இடையிலான சமமான வாய்ப்பை நிராகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யாவை அடிபணிய வைப்பதே முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் அமைச்சர் லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெலென்ஸ்கியின் ஆட்சிக்கு கீழ் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியம் அல்லது நேட்டோ அமைப்புடன் இணைப்பதே மேற்கத்திய நாடுகளின் முக்கிய நோக்கம் என்று விமர்சித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |