சொந்த கல்லறையை தாங்களே தோண்டிய தாயும் மகளும்: தந்தையின் கொடூரத்தை அம்பலப்படுத்திய இன்னொரு மகள்
பிரேசில் நாட்டில் ஒரு தாயாரும் அவரது ஒன்பது வயது மகளும் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு தங்கள் கல்லறைகளை அவர்களே தோண்ட கட்டாயப்படுத்தப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், 34 வயதான கிறிஸ்டியன் அரினா மற்றும் அவரது மகள் கரோலின் விட்டோரியா ஆகியோரை கொலை செய்த குற்றத்திற்காக ஃபேப்ரிசியோ புயிம் அரினா என்பவரை தெட்டி வருகின்றனர்.
ஃபேப்ரிசியோ தமது மனைவி மற்றும் 9 வயது மகளை கொன்று, தமது குடியிருப்பின் உள் முற்றத்தில் புதைத்துள்ளதாக கிறிஸ்டியன் அரினாவின் இன்னொரு மகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இருப்பினும், குற்றச்சாட்டை முன்வைத்துள்ள இளம்பெண்ணுக்கும் ஃபேப்ரிசியோ முன்னெடுத்த குற்றச்செயலில் பங்குள்ளதா என்பது குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடற்கூராய்வில், கிறிஸ்டியன் அரினா கத்தியால் தாக்கப்பட்டு இறந்ததாகவும், அவரது 9 வயது மகள் தலையில் தாக்கப்பட்டு இறந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
கடந்த 2ம் திகதியே, ஃபேப்ரிசியோ புதிதாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட தமது குடியிருப்பின் உள் முற்றத்தை பொலிசார் தோண்டி பரிசோதித்துள்ளனர்.
முன்னதாக, கிறிஸ்டியன் அரினா தமது ஆண் நண்பருடன் மாயமானதாகவும், கூடவே தமக்கு நெருக்கமான மகளை அழைத்து சென்றதாகவும் தகவல் பரவியது.
இந்த நிலையிலேயே சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார், ஃபேப்ரிசியோ புதிதாக கட்டிமுடித்த உள் முற்றத்தை தோண்டி பரிசோதிக்க முடிவு செய்தனர்.
தற்போது மாயமாகியுள்ள ஃபேப்ரிசியோவை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

