வளைகுடா நாடுகளைவிட... உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்டுள்ள ஏழை நாடு
வெனிசுலாவிற்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், இரு நாடுகளும் மோதிக் கொள்வது இது முதல் முறை என்றே கூறப்படுகிறது.
மிகக் குறைவான வருவாய்
எண்ணெய், அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சர்ச்சைகளால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலா அமெரிக்காவுடனும் சிக்கலான உறவுகளைக் கொண்டுள்ளது. வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், உலகின் மிகப்பெரிய சான்றளிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ள நாடு வெனிசுலா.
இருப்பினும், கச்சா எண்ணெய் ஏற்றுமதியால் வெனிசுலா மிகக் குறைவான வருவாயை ஈட்டி வருகிறது. 2023ல் வெளியான தரவுகளில், வெனிசுலாவில் 303 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை சவுதி அரேபியாவிடம் 267.2 பில்லியன் பீப்பாய்கள், ஈரானிடம் 208.6 பில்லியன் பீப்பாய்கள், கனடாவிடம் 163.6 பில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது.
இந்த நான்கு நாடுகளும் சேர்ந்து உலகின் எண்ணெய் இருப்புக்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றைக் கொண்டுள்ளது என்றே தெரிய வருகிறது. இந்த நான்கு நாடுகளையும் ஒப்பிடுகையில், அமெரிக்காவிடம் 55 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் இருப்பு மட்டுமே உள்ளது.
இதன் காரணமாக உலக வரிசையில், 9வது இடத்தில் அமெரிக்கா இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவை விட ஐந்து மடங்கு அதிகமாக கச்சா எண்ணெய் இருப்பு இருந்தும், வெனிசுலா உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகவே அறியப்படுகிறது.
மட்டுமின்றி, அமெரிக்காவின் எண்ணெய் வருவாயில் ஐந்தில் ஒரு பங்கைக் கூட வெனிசுலா ஈட்டுவதில்லை. வெனிசுலாவின் எண்ணெய் இருப்புக்கள் முக்கியமாக ஒரினோகோ பெல்ட்டில் அமைந்துள்ளன.
இந்தப் பகுதி வெனிசுலாவின் கிழக்குப் பகுதியில் சுமார் 55,000 சதுர கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இந்த பெல்ட்டில் கனமான கச்சா எண்ணெயும் காணப்படுகிறது, இது மிகவும் பிசுபிசுப்பானது மற்றும் அதிக அடர்த்தி கொண்டது.
அதிக அடர்த்தி மற்றும் கந்தகம்
இருப்பினும், வழக்கமான எண்ணெயை விட இதைப் பிரித்தெடுப்பது மிகவும் கடினம் மற்றும் செலவும் அதிகம். இந்தப் பகுதியில் எண்ணெய் உற்பத்தி செய்வதற்கு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் தேவை, அப்போதுதான் அதை விற்பனை செய்ய முடியும்.
வெனிசுலா கச்சா எண்ணெயில் அதிக அடர்த்தி மற்றும் கந்தகம் கலந்திருப்பதால், இந்த எண்ணெய் மற்ற நாடுகளின் கச்சா எண்ணெயை விட குறைந்த விலையில் விற்கப்படுகிறது.
வெனிசுலாவில் PDVSA என்ற அரசு நிறுவனமே எண்ணெய் உற்பத்தியை முன்னெடுக்கிறது. இந்த நிறுவனம் அதன் பழைய உள்கட்டமைப்பு, குறைந்த முதலீடு, தவறான மேலாண்மை மற்றும் சர்வதேச தடைகள் காரணமாக சிக்கல்களை எதிர்கொள்கிறது.
இதன் காரணமாக, வெனிசுலா தனது மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை அதன் முழு திறனுக்கும் பயன்படுத்த முடியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |