தாயை இழந்த சோகத்திலும் CSK அணிக்காக விளையாடிய முகேஷ் சௌத்ரி
2 நாட்களுக்கு முன்னர் முகேஷ் சௌத்ரியின் தாயார் உயிரிழந்த கடினமான நிலையிலும், நேற்றைய போட்டியில் விளையாடியுள்ளார்.
முகேஷ் சௌத்ரியின் தாய் உயிரிழப்பு
வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் சௌத்ரி, 2022 ஐபிஎல் தொடர் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த முகேஷ் சௌத்ரியின் தாயார் பிரேம் தேவி, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தோனியும் இந்த சூழலில் முகேஷ் சௌத்ரிக்கு உறுதுணையாக இருந்து ஆதரவு அளித்ததோடு, மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரின் தாயாரை பார்த்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், முகேஷ் சௌத்ரியின் தாயார் பிரேம் தேவி கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
SRH அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் இது குறித்து முகேஷ் சௌத்ரிக்கு தகவல் கிடைத்த நிலையில், சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்திற்கு சென்று, தாயாரின் இறுதிச் சடங்கை நிகழ்த்தியுள்ளார்.
The CSK family mourns the passing of Mukesh Choudhary’s mother.
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2026
We stand with Mukesh and his family, keeping them in our thoughts and prayers during this incredibly difficult time.
முகேஷ் சௌத்ரியின் தாயார் மறைவிற்கு CSK அணி நிர்வாகம் இரங்கல் தெரிவித்தது.
சோகத்திலும் விளையாடிய முகேஷ் சௌத்ரி
இதனை தொடர்ந்து மீண்டும் மும்பை வந்து அணியுடன் இணைந்த முகேஷ் சௌத்ரி, நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கலந்து கொண்டார்.
துக்கம் அனுசரிக்கும் விதமாக CSK வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசிய முகேஷ் சௌத்ரி, 31 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்த போட்டியில், CSK அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், வெற்றிக்கு பின்னர் பேசிய அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட், ”மிகவும் கடினமான நேரத்தில் இன்று விளையாடிய முகேஷ் சௌத்ரி தலை வணங்குகிறேன். இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.

இது போன்ற சூழலில் கிரிக்கெட்டில் பங்கேற்பது மனதளவில் பாதிப்பை தரும். ஆனால் அணியின் தேவையை உணர்ந்து, விளையாடினார். அவருக்கு அணியினர் துணையாக இருப்போம்” என கூறினார்.
தாயை இழந்த கடினமான சூழலிலும் அணிக்காக விளையாடிய அவரின் அர்ப்பணிப்பை ரசிகர்கள் போற்றி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |