தலிபான் துணைப் பிரதமர் பரதார் எங்கே இருக்கிறார்... ஜனாதிபதி அரண்மனையில் என்ன நடந்தது? வெளியான பரபரப்பு தகவல்
ஆப்கானிஸ்தான் புதிய இடைக்கால அரசாங்கத்தின் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்ட முல்லா பரதார் குறித்த பரவிவரும் வதந்திகளுக்கு தலிபான் வட்டாரங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளன.
முல்லா பரதார் கொல்லப்பட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், தான் நலமாக இருப்பதாக கூறி, அவரே பேசிய குரல் பதிவும், கைப்பட எழுதியதாக கூறி கடிதமும் வெளியானது.
எனினும், அவர் எங்கே இருக்கிறார் என்பது மர்மமாகவே இருந்து வந்தது.
தற்போது, பரதார் இருப்பிடம் குறித்து தகவல்களை காபூல் மற்றும் தோஹாவில் உள்ள தலிபான் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
காபூல் மற்றும் தோஹாவில் உள்ள தலிபான் வட்டாரங்கள் பிபிசி-க்கு அளித்த அதிகாரப்பூர்வ தகவலின் படி, வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில் முல்லா பரதார், கலீல் ஹக்கானிக்கு இடையே வாக்குவாதம் முற்றியது.
இதனையடுத்து, இருவரின் ஆதவாளர்களும் மோதலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தால் அதிருப்தியடைந்த பரதார், கந்தஹார் நகரித்திற்கு சென்றுவிட்டார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு பரதார் உடன்படவில்லை. தலிபான்கள் மட்டுமே இருக்கும் அமைச்சரவையை பரதார் விரும்பவில்லை என காபூல் மற்றும் தோஹாவில் உள்ள தலிபான் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.