மேகியுடன் தக்காளி சேர்த்து சாப்பிட்ட பெண் மரணம்! நடந்தது என்ன? பொலிஸ் விளக்கம்
இந்தியாவில் மிகவும் பிரபலமான நூடுல்ஸான மேகியை தக்காளியுடன் சேர்த்து சேமித்து சாப்பிட்ட மும்பை பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் 27 வயது பெண் ஒருவர் தவறுதலாக எலி விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்பெண் மேகியை சமைக்கும்போது, தவறுதலாக எலி விஷம் கலந்த தக்காளியை சேர்த்துள்ளார் என்று கூறியுள்ள பொலிஸார், இது ஒரு விபத்து என விளக்கம் கொடுத்துள்ளனர்.
மும்பை மலாடில் உள்ள பாஸ்கல் வாடி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ரேகா நிஷாத் என்ற பெண் ஜூலை 21 அன்று வீட்டில் எலிகளைக் கொல்ல தக்காளி மீது எலியை கொல்லும் மருந்தை தடவி வைத்துள்ளார். அடுத்த நாள், அவர் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது, தவறுதலாக தனது நூடுல்ஸில் அதே தக்காளியைச் சேர்த்து சமைத்துள்ளார் என்று இந்த சம்பவத்தில் விசாரணை நடத்திய பொலிஸார் தெரிவித்தனர்.
மேகி சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே வாந்தி எடுக்க ஆரம்பித்தார். ரேகாவின் கணவரும், மைத்துனரும் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேகா புதன்கிழமை உயிரிழந்தார்.