சர்வதேச போட்டிகளில் இருந்து தமிழக வீரர் முரளி விஜய் ஓய்வு: புதிய அத்தியாயத்தை எதிர்பார்க்கிறேன் என அறிவிப்பு
தமிழக கிரிக்கெட் வீரர் முரளி விஜய் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.
முரளி விஜய் சாதனைகள்
கடந்த 2008ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் தமிழக வீரர் முரளி விஜய் முதல் முறையாக அறிமுகமானார்.
இவர் இதுவரை இந்தியாவுக்காக 61 டெஸ்ட், 17 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார், 61 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 3982 ஓட்டங்கள் குவித்துள்ள முரளி விஜய் அவற்றில் 15 அரை சதங்களும் 12 சதங்களும் விளாசியுள்ளார்.
அதைப்போல 17 ஒருநாள் போட்டிகளில் 339 ஓட்டங்களும், 9 டி20 போட்டிகளில் 169 ஓட்டங்களும் சேர்த்துள்ளார்.
Murali Vijay (Getty)
2014ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பலமான பந்துவீச்சில் சுமார் 1000 பந்துகளை எதிர்கொண்டார்.
2018ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியே முரளி விஜய்க்கு இந்திய அணியின் கடைசி போட்டியாக அமைந்துள்ளது.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு
சமீபத்தில் பி.சி.சி.ஐ.-யை நம்பி சேர்ந்து விட்டதாக கருத்து தெரிவித்திருந்த தமிழக வீரர் முரளி விஜய், திங்கட்கிழமையான நேற்று தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் “இன்று, மிகுந்த நன்றியுடனும் பணிவுடனும், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
@BCCI @TNCACricket @IPL @ChennaiIPL pic.twitter.com/ri8CCPzzWK
— Murali Vijay (@mvj888) January 30, 2023
அத்துடன் “2002-2018 வரையிலான எனது பயணம் எனது வாழ்க்கையின் மிக அற்புதமான ஆண்டுகள், ஏனெனில் இது விளையாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ), சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் செம்பிளாஸ்ட் சன்மார் எனக்கு வழங்கிய வாய்ப்புகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம் கிரிக்கெட் உலகிலும் அதன் வணிகப் பக்கத்திலும் புதிய வாய்ப்புகளை நான் ஆராய்வேன் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இது ஒரு கிரிக்கெட் வீரராக எனது பயணத்தின் அடுத்த படியாகும், மேலும் எனது வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயத்தை எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.