ஜம்மு காஷ்மீரில் முத்தையா முரளிதரன் முதலீடு ரத்து: சர்ச்சை பின்னணி என்ன?
நில ஒதுக்கீட்டில் வெடித்த சர்ச்சை காரணமாக ஜம்மு காஷ்மீரில் முத்தையா முரளிதரன் முதலீடு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முத்தையா முரளிதரன் முதலீடு ரத்து
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் அவர்களின் குளிர்பான நிறுவனம் ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளவிருந்த முதலீட்டை ரத்து செய்துள்ளது.
அந்நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் வெடித்த பெரும் சர்ச்சையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சர்ச்சையின் பின்னணி
சனிக்கிழமையன்று ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர்கள், முரளிதரன் நிறுவனமான சிலோன் பெவரேஜஸ் கேன் பிரைவேட் லிமிடெட்க்கு நிலம் இலவசமாக வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைத்தனர்.
குளிர்பான கேன்கள் தயாரிக்கும் இந்த நிறுவனம், ஜம்மு மாகாணத்தின் கதுவா மாவட்டத்தில் உள்ள தொழிற்பேட்டை பக்தாலி-II இல் 206 கனல் நிலத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் புதிதாக அமல்படுத்திய தொழில் மற்றும் நிலக் கொள்கையின் கீழ், வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
முதலீடு ரத்து
சர்ச்சை வெடித்ததை அடுத்து சிலோன் பெவரேஜஸ் நிறுவனம் திட்டத்திலிருந்து விலக அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலர் அடல் துல்லோ தலைமையிலான உச்சநிலைக் குழுவால் ஜூன் 2024 இல் அங்கீகரிக்கப்பட்ட நில ஒதுக்கீடு, நிறுவனத்திற்கு 40 வருட குத்தகை வழங்கியது.
இதில் ஒரு கனலுக்கு 8 லட்சம் ரூபாய் பிரீமியமும், ஆண்டுக்கு 6000 ரூபாய் குத்தகைத் தொகையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |