ஐரோப்பா முழுவதும் இனவாத நெருக்கடியை எதிர்கொள்ளும் ஒரு சமூக மக்கள்: ஆய்வில் வெளியான தகவல்
ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய சமூக மக்கள் இனவாத நெருக்கடியை எதிர்கொள்வது கவலை கொள்ளும் வகையில் அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று ஆய்வில் கண்டறிந்துள்ளது.
இனவெறி மற்றும் பாகுபாடு
கணக்கெடுப்பில் பதிலளித்த இஸ்லாமியர்களில் பாதி பேர்கள் சமீபத்தில் தாங்கள் பாகுபாடுகளை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர்.
ஐரோப்பாவில் உள்ள 13 உறுப்பு நாடுகளில் 9,600 இஸ்லாமியர்களிடம் நடத்திய ஆய்வில், இனவெறி மற்றும் பாகுபாடு அவர்களின் வாழ்க்கையின் பெரும்பாலான அம்சங்களில் ஊடுருவி இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் சிறார்கள் ஏளனத்திற்கு உள்ளாவதாகவும், வேலை வாய்ப்பில் பாகுபாடு மற்றும் குடியிருப்பை வாடகைக்கு அல்லது வாங்கும் போது பாரபட்சம் காட்டப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
உண்மையில், 2023 அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு தொடர்புடைய ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வன்முறை சம்பவத்திற்கு பின்னர் இஸ்லாமியர்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்றே வியன்னாவைச் சேர்ந்த இந்த முகமை, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தேசிய அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பா முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனவாதம் மற்றும் பாகுபாடு அதிகரித்துள்ளது கண்கூடு என குறிப்பிட்டுள்ளார் FRA முகமையின் இயக்குநர் Sirpa Rautio. அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் முன்னெடுத்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்தே இஸ்லாமியர்கள் மற்றும் யூத சமூகங்களை இலக்காகக் கொண்ட வெறுப்புக் குற்றங்களின் அதிகரிப்பு காணப்படுவதாக அவர் பதிவு செய்துள்ளார்.
ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களிடம் FRA முகமை உரையாடியுள்ளது.
இஸ்லாமியராக வாழ்வது
இதில், 47 சதவிகிதம் பேர்கள் 2022 க்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் இனவெறியை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர். 2016ல் இது 39 சதவிகிதமாக இருந்துள்ளது. ஐரோப்பாவில் இஸ்லாமியர்களின் நிலை இன்னும் மோசமடைந்து வருவதாகவே பார்க்க முடிகிறது என தெரிவித்துள்ளார் இன்னொரு ஆய்வாளர்.
ஐரோப்பாவில் இஸ்லாமியராக வாழ்வது என்பது மிகவும் சிக்கலானதாகி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆய்வு முன்னெடுக்கப்பட்ட 13 உறுப்பு நாடுகளில், 39 சதவிகித இஸ்லாமியர்கள் வேலை வாய்ப்புகளில் பாகுபாடு காட்டுவதாக தெரிவித்தனர்.
41 சதவிகிதம் பேர்கள் தங்கள் கல்வி தகுதிக்கு ஏற்ற வேலையில் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். ஐரோப்பாவில் பிறந்த இஸ்லாமியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (55%) கடந்த ஐந்தாண்டுகளில் வேலை தேடும் போது தாங்கள் இனரீதியாக பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
ஒரேப்போன்று மொழித் திறன் மற்றும் தகுதிகள் இருந்தபோதிலும் தாங்கள் சமமாக நடத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். 16 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்கள் மதம் சார்ந்த ஆடைகளை அணிந்தால், பாகுபாடு விகிதம் 58 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
பிரித்தானியா போலல்லாமல், பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இன அல்லது இன வேறுபாடு பற்றிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவைச் சேகரிப்பதில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |