இஸ்ரேல் நாட்டை உருவாக்கியதே எங்கள் குடும்பம்தான்
யூத குலத்தை அழித்தொழிக்க ஜேர்மானிய சர்வாதிகாரியான ஹிட்லர் முயன்றது அனைவரும் அறிந்ததே.
ஆனால், அதே யூத குலத்துக்காக, இஸ்ரேல் என்னும் ஒரு நாட்டை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த ஒரு குடும்பத்தின் வரலாறும், ஹிட்லர் வாழ்ந்த அதே ஜேர்மன் நாட்டிலிருந்துதான் துவங்கியது என்பது விசித்திரமான வரலாற்று உண்மை!
இஸ்ரேல் நாட்டை உருவாக்கியதே எங்கள் குடும்பம்தான்
என் குடும்பம்தான் இஸ்ரேல் நாட்டை உருவாக்கியது என்று ஒரு முறை கூறினாராம் ஜேக்கப் ரோத்ஸ்சைல்ட் (Lord Jacob Rothschild) என்பவர். அவர் எப்படி அப்படிக் கூறமுடியும்?
1744ஆம் ஆண்டு, ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரில் பிறந்தவர் மேயர் ரோத்ஸ்சைல்ட் (Mayer Amschel Rothschild).
வங்கியாளரான அவருடைய ஐந்து மகன்களும் லண்டன், பாரீஸ், வியன்னா, நேப்பில்ஸ் மற்றும் பிராங்பர்ட் ஆகிய நகரங்களில் நிறுவிய வங்கிகள், மன்னர்களுக்கு கூட நிதியுதவி செய்துள்ளன.
இந்த மேயரின் பேரன் மற்றும் ஜேம்ஸ் டி ரோத்ஸ்சைல்டின் இளைய மகனான எட்மண்ட் ஜேம்ஸ் டி ரோத்ஸ்சைல்ட் என்பவர், யூத மக்களுக்கு ஒரு தாயகத்தை நிறுவும் யோசனையான சியோனிசத்தின் சிறந்த ஊக்குவிப்பாளர்களில் ஒருவர் ஆவார்.
யூத எதிர்ப்பு மற்றும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் யூதர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களை உணர்ந்த எட்மண்ட், அப்போது ஒட்டோமான் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் நிலம் வாங்குவதற்கு ஏராளமான பணத்தை முதலீடு செய்தார்.
யூத காலனிகளை நிறுவுவதற்கும், அந்த நாடுகளில் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கும் எட்மண்ட் நிதியளித்தார் எட்மண்ட்.
அவர் இறந்த பிறகு, அவரது உடல் பாரிஸில் முதலில் புதைக்கப்பட்டாலும், 1954இல் எட்மண்ட் மற்றும் அவரது மனைவி அட்லிஹெய்டின் உடல்கள் இஸ்ரேலுக்கு ஒரு போர்க்கப்பலில் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவர்கள் உடல்களுக்கு பிரதமர் டேவிட் பென் குரியன் தலைமையிலான அரசு இறுதி மரியாதை செய்தது.
லியோனல் வால்டர் (வால்டர்) ரோத்ஸ்சைல்ட் (1868-1937), இரண்டாவது லார்ட் ரோத்ஸ்சைல்டான இவர், 1917இல் கையெழுத்திடப்பட்ட, புகழ் பெற்ற பால்ஃபோர் பிரகடன ஆவணத்தைப் பெற்றவர் என்பதால், இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு வழிவகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
ஆக, என் குடும்பம்தான் இஸ்ரேல் நாட்டை உருவாக்கியது என ஜேக்கப் ரோத்ஸ்சைல்ட் கூறியதில் வியப்பொன்றும் இல்லையே!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |