கொன்று குவிக்கும் மியான்மர் இராணுவம்... 235 பொதுமக்கள் மரணம்: தொடரும் போராட்டம்
ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுவரும் ஆர்ப்பாட்டக்காரர்களில் 200க்கும் மேற்ப்பட்டோரை இதுவரை மியானமர் இராணுவம் சுட்டு கொன்றுள்ளது.
கடந்த 44 நாட்களில் குறைந்தது 235 பேர் இராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக மியான்மரில் உள்ள சிவில் உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 224-ஆக இருந்தது. வெள்ளிக்கிழமை மேலும் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
ஆனால், உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என சிவில் உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. மேலும், இராணுவ சதித்திட்டம் தொடர்பாக இதுவரை 2,330 பேர் கைது செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு அல்லது தண்டிக்கப்பட்டுள்ளனர் என உரிமைகள் குழு கூறியுள்ளது.
மியான்மரில் கடந்த அப்பிரவாரி 1-ஆம் திகதி அரசு தலைவர் ஆங் சான் சூகி, முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரை கைது செய்து மியான்மர் இராணுவம் நாட்டை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
இதனையடுத்து, அந்நாட்டு மக்கள் இராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆங் சான் சூகியை விடுவிக்க கோரியும் கடந்த 6 வாரங்களாக பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை எதிர்த்து மியான்மர் இராணுவம் தினமும் தாக்குதல் நடத்திவருகிறது. இருப்பினும் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
உலக நாடுகளின் தலைவர்களும் மியான்மர் இராணுவத்தின் செயலுக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்து, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.



