டிக்டாக்கில் நிலநடுக்க பீதியை கிளப்பிய ஜோதிடர்! சிறையில் அடைத்த அதிகாரிகள்
மியான்மரில் டிக்டாக் காணொளி மூலம் அடுத்த நிலநடுக்கம் குறித்து அச்சமூட்டும் கணிப்பை வெளியிட்ட ஜோதிடர் ஒருவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஜோதிடர்
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் சமீபத்தில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 3,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து இரண்டு வாரங்களுக்குள், ஜான் மோ தி(John Moe The) என்ற ஜோதிடர் நிலநடுக்கம் குறித்து அச்சமூட்டும் கணிப்பை டிக்டாக்கில் வெளியிட்டார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்தியதாக கூறி தகவல் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஜான் மோ தி-யை கைது செய்துள்ளது.
மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்ற அந்த டிக்டாக் வீடியோவில், ஜான் மோ தி குறிப்பாக ஏப்ரல் 21ஆம் திகதி "மியான்மரின் ஒவ்வொரு நகரத்தையும் நிலநடுக்கம் தாக்கும்" என்று தீர்க்கதரிசனம் கூறியிருந்தார்.
மேலும், நிலநடுக்கம் ஏற்படும் சமயத்தில் "முக்கியமான பொருட்களை எடுத்துக்கொண்டு கட்டிடங்களிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும்", "பகலில் உயரமான கட்டிடங்களில் மக்கள் இருக்க வேண்டாம்" என்றும் தனது வீடியோவின் தலைப்பில் அறிவுறுத்தியிருந்தார்.
நிபுணர்கள் மறுப்பு
அதிர்ச்சியூட்டும் இந்த ஜோதிட கணிப்பை நிபுணர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான சிக்கலான புவியியல் காரணிகளை வைத்து பார்க்கும்போது, அவற்றை முன்கூட்டியே துல்லியமாக கணிப்பது என்பது சாத்தியமற்றது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும், ஜான் மோ தி-யின் இந்த கணிப்பு மியான்மர் மக்களிடையே குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |