30,000 பேர்களில் பாதிப்பு... டசின் கணக்கான குழந்தைகள் இறப்பு: அச்சுறுத்தும் மர்ம நோயால் கலக்கம்
டசின் கணக்கான குழந்தைகளின் இறப்புக்கு காரணமான மர்ம நோயால் சுமார் 30,000 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்ந்து பரவக்கூடும் என்ற அச்சம் அதிகாரிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்க்ரப் டைபஸ் அல்லது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இந்த மர்ம நோயானது இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் தீவிரமாக பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மர்ம நோயால் டசின் கணக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இறந்துள்ளனர். கோரதாண்டவமாடிய கொரோனாவின் இரண்டாவது அலையில் இருந்து மிகவும் மெதுவாக மீண்டுவரும் இந்தியாவில் தற்போது இந்த மர்ம நோய் பரவல் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சுகாதாரத்துறை மொத்தமாக ஸ்தம்பித்துப் போயுள்ள உத்தர பிரதேச மாநிலத்தில், இந்த மர்ம நோய் பரவல் தொடர்பில் மருத்துவர்கள் பீதியடைந்துள்ளனர்.
உள்ளூர் தகவலின் அடிப்படையில் கான்பூர் நகரில் மட்டும் 30,000 பேர்கள் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் பெரும்பாலும் சிறார்கள் உட்பட 40 பேர்கள் இந்த மர்ம நோய்க்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் மூட்டுவலி, தலைவலி, நீரிழப்பு மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட அனைவருக்கும் கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த மர்ம நோய்க்கும் கொரோனா பாதிப்புக்கும் தொடர்பு இல்லை என்றே கண்டறியப்பட்டுள்ளது.