11ஆம் திகதி மரணமடைந்ததாக கூறப்பட்ட நடிகர் மனைவி: 12ஆம் திகதி மொபைலில் அழைத்த ஆதாரம்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹாக்மேன் மற்றும் அவரது மனைவி மரணத்தில் தொடர்ந்து மர்மம் அதிகரித்துவருகிறது.
ஆம், ஜீன் ஹாக்மேனின் மனைவி பிப்ரவரி மாதம் 11ஆம் திகதி மரணமடைந்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், அவர் 12ஆம் திகதி மருத்துவமனை ஒன்றை தனது மொபைலில் அழைத்துள்ளது தெரியவந்துள்ளதால் குழப்பம் உருவாகியுள்ளது.
11ஆம் திகதி மரணமடைந்ததாக கூறப்பட்ட நடிகர் மனைவி
ஜீன் ஹாக்மேனும் (Gene Hackman, 93), அவரது மனைவியான பெற்சியும் (Betsy Arakawa, 63), அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்திலுள்ள Santa Fe என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த நிலையில், கடந்த மாதம், அவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியது.
அவர்களுடைய மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த அதிகாரிகள், ஜீனின் மனைவியான பெற்சிதான் முதலில் உயிரிழந்துள்ளார் என்றும், அவர் எலிகள் போன்ற விலங்குகள் மூலம் பரவும் ஒருவகை நுரையீரல் வைரஸ் தொற்றுநோயால் உயிரிழந்துள்ளார் என்றும் கூறியிருந்தார்கள்.
பெற்சி பிப்ரவரி 11ஆம் திகதி உயிரிழந்திருக்கலாம் என்றும், தன் மனைவி மரணமடைந்தது தெரியாமலே, அவரது உடலுடன் ஜீன் ஹாக்மேன் ஒரு வாரம் வாழ்ந்திருக்கக்கூடும் என்றும், ஜீன் ஹாக்மேன் 18ஆம் திகதி உயிரிழந்திருக்கலாம் என அவரது இதயத்தில் பொருத்தப்பட்டிருந்த பேஸ்மேக்கர் கருவி தரவுகள் தெரிவிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.
12ஆம் திகதி வந்த மொபைல் அழைப்பு
இந்நிலையில், பிப்ரவரி மாதம் 12ஆம் திகதி, பெற்சி, மருத்துவமனை ஒன்றை தன் மொபைலில் அழைத்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அவர், 12ஆம் திகதி காலை, மூன்று முறை மருத்துவமனையை அழைத்துள்ளார்.
அத்துடன், மதியம் அதே மருத்துவமனையிலிருந்து பெற்சியை மருத்துவமனை ஊழியர்கள் அழைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
12ஆம் திகதி மருத்துவமனையில் தனக்காக அப்பாயின்ட்மெண்ட் பெற்றிருந்த பெற்சி, பின்னர் தனது கணவரின் உடல் நிலை மோசமானததால் அதை கேன்சல் செய்துள்ளார்.
பெற்சி மருத்துவமனையை அழைத்ததை அதிகாரிகள் உறுதி செய்துள்ளார்கள்.
ஆக, ஜீன் ஹாக்மேன் மற்றும் அவரது மனைவி மரணத்தில் மர்மம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |