பிரபல நாட்டுடனான உறவை முற்றிலுமாக துண்டித்த வட கொரியா! அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை
மலேசியாவுடானான தூதரக உறவுகளை துண்டிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது. அந்நாட்டில் பணமோசடி குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் வட கொரியரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அந்நாட்டுடனான உறவை வடகொரியா துண்டித்துள்ளது.
மலேசியாவில் உள்ள வட கொரியரான Mun Chol Myong, முன்னணி நிறுவனங்களில் பண மோசடி செய்ததாகவும், வட கொரியாவுக்கு சட்டவிரோதமாக சாதனங்கள் அனுப்புவதற்கு உதவ மோசடி ஆவணங்களை வழங்கியதாக அமெரிக்க குற்றம்சாட்டியது.
இதனையடுத்து, மலேசிய அதிகாரிகள் Mun Chol Myong-ஐ 2019 ஆம் ஆண்டு கைது செய்தனர். Mun Chol Myong-ஐ தங்களிடம் ஒப்படைக்குமாறு மலேசியாவிடம் அமெரிக்க கோரிக்கை விடுத்தது.
இது அரசியல் நோக்கம் கொண்டது என அமெரிக்காவின் கோரிக்கைக்கு எதிராக Myong வாதிட்டு வந்த நிலையில், அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மலேசியா உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த ஒப்படைப்பு மலேசிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான நடவடிக்கை மற்றும் மன்னிக்க முடியாத கடும் குற்றம் என்று வட கொரிய வெளியுறவு அமைச்சகம் சாடியுள்ளது.
மலேசியாவின் நடவடிக்கைகள் இறையாண்மை அடிப்படையிலான இருதரப்பு உறவுகளின் முழு அடித்தளத்தையும் அழித்துவிட்டன.
இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் முக்கிய குற்றவாளியான அமெரிக்கா, இதற்கு தகுந்த விலையை கொடுக்கக்கூடும் என்று நாங்கள் முன்கூட்டியே எச்சரிக்கிறோம் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.