2006 நினைவிருக்கிறதா? ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிம் இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை
தேவைப்பட்டால் இஸ்ரேலை இராணுவ ரீதியாக எதிர்கொள்ள ஹிஸ்புல்லா குழு முழுமையாக தயாராக இருப்பதாக அதன் தலைவர் நயீம் காசிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தயாராக இருக்கிறோம்
கடந்த 2006ல் ஹிஸ்புல்லாவை அழிக்க புறப்பட்ட இஸ்ரேல் படைகள், நீண்ட 33 நாட்களுக்குப் பிறகு ஐ.நா மன்றத்தின் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் வெளியேறியதையும் நயீம் காசிம் நினைவுப்படுத்தியுள்ளார்.
மேலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் அமெரிக்க ஆதரவு பிராந்திய அழுத்தங்களால் லெபனான் இருத்தலியல் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மட்டுமின்றி, இஸ்ரேல் எல்லை மீறினால், தற்காப்பு அவசியமான ஒரு நிலையை அடைந்தால், நாங்கள் வெற்றி அல்லது தியாகத்திற்கு தயாராக இருக்கிறோம் என்றும் காசிம் கூறியுள்ளார்.
மேலும், எந்தவொரு அச்சுறுத்தலின் கீழும் சரணடைவதற்கோ அல்லது நமது ஆயுதங்களை இஸ்ரேலிடம் ஒப்படைப்பதற்கோ இடமில்லை என்பதையும் காசிம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலிய விரிவாக்கம்
இஸ்ரேலின் அத்துமீறல்களை அமெரிக்கா ஆதரிப்பதாகவும், இஸ்ரேலின் கடந்த கால மீறல்களை கண்டுகொள்ளாமல் ஹிஸ்புல்லாவின் ஆயுதக் குறைப்புக்கான கோரிக்கைகளை மீண்டும் முன்வைக்கும் ஒரு புதிய ஒப்பந்தத்தை திணிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மட்டுமின்றி, சிரியா, காஸா மற்றும் பரந்த பிராந்தியத்தில் இஸ்ரேலிய நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு, ஒரு பெரிய இஸ்ரேலிய விரிவாக்க நடவடிக்கைகள் ரகசியமாக முன்னெடுக்கப்படுவதாக, அதற்கு வழக்கம் போல அமெரிக்க நிர்வாகம் ஒத்துழைப்பதாக அவர் கருதுவதையும் காசிம் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மட்டுமல்ல, விரிவாக்கம் செய்து, வலுக்கட்டாயமாக நிர்வகித்து, தங்களுக்கு சாதகமாக ஆணையிடுகிறது என்றும் காசிம் விளக்கமளித்துள்ளார்.
ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவது லெபனான் மீதான இஸ்ரேலிய-அமெரிக்க ஆதிக்கத்திற்கான கடைசி தடையை நீக்குவதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |