நமீதா வருத்தப்பட வேண்டாம்.., மீனாட்சி அம்மன் கோயில் விவகாரத்திற்கு அமைச்சர் சேகர்பாபு கருத்து
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை நமீதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்திற்கு அமைச்சர் சேகர்பாபு கருத்து தெரிவித்துள்ளார்.
கோயிலில் அனுமதி மறுப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று காலை தனது கணவருடன் நடிகை நமீதா தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த கோயில் அதிகாரி ஒருவர் நமீதாவிடம், "நீங்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவரா, அதற்கான சான்றிதழ் எதுவும் உள்ளதா?" என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், நானும் எனது கணவரும் பிறப்பிலேயே இந்து தான், பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.
இதன் பின்னர் அந்த அதிகாரி, "குங்குமம் வைத்துக் கொண்டு சாமி தரிசனம் செய்யச் செல்லுங்கள்" என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அதற்கு அவரும் குங்குமம் வைத்துக்கொண்டு சாமி தரிசனம் செய்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நடிகை நமீதா கோயிலில் நடந்தது குறித்து வீடியோவாக வெளியிட்டு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு பேசியது
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை நமீதா மனம் புண்படும்படி சட்டத்திற்கு புறம்பாக நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நமீதா வருத்தப்பட வேண்டாம். அவர் வருத்தப்பட்டால் அதற்காக தாங்களும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
இதற்கு முன்னதாக கோயில் தரப்பில், "பொதுவாக முகக்கவசம் அணிந்து வருவோரிடம் விவரம் கேட்பது நடைமுறை. அதே போல முகக்கவசம் அணிந்து வந்த நமீதாவிடம் விவரம் கேட்கப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |