உக்ரைன் விவகாரம்... இரண்டுபட்ட நேட்டோ: பிரித்தானியாவின் முன்னெடுப்பை குற்றஞ்சாட்டும் ட்ரம்ப்
உக்ரைன் போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்காவை நம்பியிருப்பதால் பிரித்தானியா தலைமையிலான கூட்டணி பலவீனமாக இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
கூட்டணி பலவீனமாக
உக்ரைன் தொடர்பில் உறுதியான முடிவுக்கு வர முடியாமல் நேட்டோ அமைப்பு இரண்டுபட்டுள்ள நிலையிலேயே பிரித்தானியா தலைமையிலான கூட்டணி பலவீனமாக இருப்பதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ட்ரோன் மற்றும் வெடிகுண்டு வீச்சால் உக்ரைன் சின்னாபின்னமாகி வரும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் 30 நாட்கள் போர் நிறுத்தம் ஒன்றை முன்மொழிந்துள்ளார். ஆனால் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் எதையும் அவர் முன்வைக்கவில்லை.
இதனிடையே, ரஷ்யாவுக்கு எதிராக ஜோ பைடன் நிர்வாகம் விதித்துள்ள தடைகள் அனைத்தையும் நீக்க ட்ரம்ப் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும், ரஷ்யாவுடன் வர்த்தக உறவை முன்னெடுக்க ட்ரம்ப் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ரஷ்யா உடைக்க மிகவும் பயப்படும் ஒரு உடன்படிக்கை மூலம் போருக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என பிரித்தானியா நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
லண்டனில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு உச்சி மாநாடைத் தொடர்ந்து உக்ரைன் தொடர்பில் ஒரு பொதுவான கொள்கை உருவாக்கபப்டும் என ஐரோப்பிய தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால், திட்டம் முன்வைக்கப்பட்டபோது எவரும் ஆதரிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இராணுவத்தை அனுப்ப முடியாது
இதனையடுத்தே, அமெரிக்காவின் ஆதரவின்றி அவர்களால் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்க முடியாது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அவர்களின் கூட்டணி பலவீனமாக உள்ளது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனிடையே, பிரித்தானியா முன்வைக்கும் திட்டத்திற்கு எஸ்டோனியா, லிதுவேனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகள் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், ரஷ்ய ஆதரவாளர்களான ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ட்ரம்ப் ஆதரவாளரான இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி உக்ரைனில் தங்கள் இராணுவத்தை அனுப்ப முடியாது எனவும், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா முன்வைக்கும் திட்டத்தில் தம்மால் உறுதியான முடிவெடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு ஐரோப்பிய துருப்புக்களை அனுப்புவது தொடர்பாக அவர் முன்பு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் கருத்து மோதலில் ஏற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |