நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது: முழு விவரம்!
இந்தியாவிலிருந்து தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேஹல் மோடி பண மோசடி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) ₹28,000 கோடி மதிப்பிலான மோசடி வழக்கில் தனது சகோதரருக்கு உதவியதாக நேஹல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெல்ஜிய குடியுரிமை பெற்ற வைர வியாபாரியான நீரவ் மோடி, அவரது கூட்டாளிகள் மற்றும் அவரது மாமா மெகுல் சோக்சி ஆகியோருடன் இணைந்து, PNB இலிருந்து சட்டவிரோதமான வழிகளில் கடன் பெற்று பெரிய அளவிலான மோசடியை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை (ED) மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) ஆகியோர் இவர்கள் மீது மோசடி மற்றும் குற்றச் சதி வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
மோசடி செய்யப்பட்ட பணத்தை ஷெல் நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு கணக்குகளுக்கு அனுப்ப தனது சகோதரருக்கு நேஹல் மோடி உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரண்டு சகோதரர்கள் மீதும் இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தியா கோரிக்கை
நீரவ் மோடி தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டு, இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக போராடி வரும் நிலையில், நேஹல் மோடியை அமெரிக்காவில் கைது செய்து நாடு கடத்துமாறு இந்திய அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, நேஹல் மோடி நேற்று கைது செய்யப்பட்டார். அவர் ஜூலை 17 அன்று அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அவர் பிணை கோரினால், அமெரிக்க அரசு அதை எதிர்க்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |