பற்றி எரியும் நேபாளம்; பதவி விலகிய பிரதமர் ஒலி - நாட்டை விட்டே செல்கிறாரா?
சமூகவலைத்தளங்கள் மீதான தடைக்கு எதிரான போராட்டம் காரணமாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
போராட்டத்தில் 19 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில், கடந்த வாரம் பதிவு செய்யப்படாத பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களை அந்த நாட்டு அரசு தடை செய்தது.
இந்த தடை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என கூறி, தடையை நீக்குமாறு நாடு முழுவதிலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
போராட்ட குழுவினர், பாராளுமன்றத்திற்குள் நுழைய முயன்றதால், காவல்துறையினர் அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர்.
காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், போராட்டக்காரர்கள் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, சமூகவலைத்தளம் மீதான தடையை நீக்குவதாகவும், போராட்டத்தை கைவிடுமாறும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் பிரித்வி சுப்பா குருங் அறிவித்தார்.
பதவி விலகிய பிரதமர் ஒலி
வன்முறையை தடுக்க தவறியதாக நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லோகாக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து, சுகாதார துறை அமைச்சர் பிரதீப் பவுடெல், விவசாயதுறை அமைச்சர் ராம்நாத் அதிகாரி ஆகியோர் அடுத்தது ராஜினாமா செய்துள்ளனர்.
தடை நீக்கப்பட்ட பின்னரும், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலக வேண்டுமென கூறி, போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேபாள பாராளுமன்றம், நேபாள ஜனாதிபதி ராமச்சந்திர பவுடேல், பிரதமர் ஒலியின் வீடு, அமைச்சர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
தனது பொறுப்புகளை, துணை பிரதமரிடம் ஒப்படைத்துள்ள பிரதமர் ஒலி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதேவேளையில், பிரதமர் கே.பி. சர்மா ஒலி, துபாய்க்கு தப்பி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, ஹிமாலயன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |