நேபாள-திபெத் பெருவெள்ளம்... என்ன நடந்தது: விரிவான பின்னணி
Deadly Nepal-Tibet floods: நேபாளம்-திபெத் பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு குறித்த விரிவான பின்னணி.
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்டுள்ள பெரும் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஆகியவை பரவலான சேதத்தை ஏற்படுத்தியதோடு, நூற்றுக்கணக்கானோரின் மரணத்திற்கும் பலர் காணாமல் போவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க அளவில் உயிர் அபாயங்கள் ஏற்பட்டுள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், நேபாள அதிகாரிகள் மிகப்பெரிய அளவிலான இழப்பை எதிர்பார்க்கின்றனர்.
நிலச்சரிவு ஏற்படுவதற்குச் சற்று முன்பு திபெத்-நேபாள எல்லையில் நிலநடுக்கம் ஒன்று பதிவானதாக நேபாள வெளிவிவகார அமைச்சர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்; இதுவே அந்தப் பேரிடரைத் தூண்டியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஆனால், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் சமீபத்திய பகுப்பாய்வு நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்பதைக் குறிக்கிறது; இது நிலச்சரிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஒரு சாத்தியம் என்னவென்றால், மழைநீர் அல்லது உருகும் பனியிலிருந்து வரும் நீர், நிலத்தையோ பனியையோ நிலை குலையச் செய்து, ஒரு தொடர் வினையைத் தூண்டியிருக்கலாம்.
இந்து குஷ் இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதற்குப் பருவநிலை மாற்றம் காரணமாக அமைகிறது என்பது தெரிந்ததே; இருப்பினும், இந்த குறிப்பிட்ட நிகழ்வில் அதன் பங்கைத் துல்லியமாகக் குறிப்பிடுவதற்கு இது மிக ஆரம்பக்கட்ட நிலையே என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விஞ்ஞானிகள் தற்போது இந்தப் பேரிடன் உண்மையானப் பின்னணி என்ன என்பது தொடர்பில் டெஹ்ரிந்துகொள்ள முயன்று வருகின்றனர். மேலும், நிலச்சரிவு சரியாக எங்கு ஏற்பட்டது, பனிப்பாறை ஏதேனும் திடீரென வற்றியதா, ஆற்றுப் பாதை எங்கு மறிக்கப்பட்டிருக்கலாம் என்பது குறித்த செயற்கைக்கோள் படங்கள் மற்றும் சமீபத்திய மழைப்பொழிவு குறித்த தரவுகள் ஆகியவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
நுவாகோட் (Nuwakot) பகுதியில், வேகமாக முன்னேறி வந்த சேறு மற்றும் பாறைகளின் பெருவெள்ளம் கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாகனங்களை அடித்துச் செல்வதை அந்தப் பகுதி மக்கள் அங்கிருந்து தப்பி ஓடியபோது எடுக்கப்பட்ட காட்சிகளில் பதிவாகியுள்ளது.
ஒரு காணொளியில், திரிசூலி ஆற்றின் பள்ளத்தாக்கு வழியாக நீர் மற்றும் சேறு கலந்த பிரம்மாண்டமான சுவரொன்று பாய்ந்து வந்து, பல மாடிகளைக் கொண்ட ரசுவாகதி எல்லைச் சோதனைச் சாவடியை மூழ்கடிப்பது பதிவாகியுள்ளது.
போட் கோஷி, திரிசூலி மற்றும் நாராயணி நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேபாள எல்லையின் திபெத்தியப் பகுதியில் உள்ள கிராமங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மரணமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

குறைந்தது 162 பேர் மரணமடைந்துள்ளதாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. இறந்தவர்களில், 64 பேர் சித்வான் மாவட்டத்தின் கீழ்நிலைப் பகுதிகளிலும், மேலும் 26 பேர் நவல்பாசி கிழக்குப் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
திபெத்தின் கியிராங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுப் பேரழிவில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 558 ஆக உயர்ந்துள்ளதாக சீனாவின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இவர்களில் 260 பேர் வெளிநாட்டினர் என்றும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாகவே நீடிக்கிறது என்றும் சிசிடிவி தெரிவித்துள்ளது. கியிராங்கில் உள்ள எல்லை, சீனாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே சுற்றுலாப் பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கான முக்கிய கடக்கும் இடமாக விளங்குகிறது.
முன்னதாக, சுமார் 579 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனதாகவும், அவர்களில் 466 பேர் வெளிநாட்டினர் என்றும் நேபாளம் தெரிவித்திருந்தது. நேபாள மற்றும் சீனப் புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காணாமல் போனவர்களில் யாரேனும் இருமுறை கணக்கிடப்பட்டுள்ளனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால தங்குமிடம், தண்ணீர், சுகாதாரம் மற்றும் பிற நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக 500,000 டொலர் நிதியுதவி அளிப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

நேபாளத்தில் உள்ள பிரித்தானியக் குடிமக்களுக்கு உதவும் வகையில், பிரித்தானிய அரசாங்கம் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார். இதுவரை வெளியாகியுள்ள தரவுகலின் அடிப்படையில், காணாமல் போனவர்களில் குறைந்தது 34 அவுஸ்திரேலிய குடிமக்கள் அடங்குவதாக பிரதமர் ஆன்றனி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
காணாமல் போனவர்களில் 54 அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் அடங்குவதாக நேபாள சுற்றுலா வாரியம் அளித்துள்ள சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. 24 கனடியர்கள் காணாமல் போனதாக நேபாள சுற்றுலா வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
13 வயது சிறுமி உட்பட 33 பிரித்தானியக் குடிமக்கள் காணாமல் போயுள்ளதை நேபாள காவல்துறை உறுதி செய்துள்ளது. இதனிடையே, ஃபிஷ்டெயில் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்துடன் பயணம் செய்த 17 மலேசியர்கள் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் உள்ள மலேசிய தூதரக அதிகாரி ஒருவர், 50-க்கும் மேற்பட்ட மலேசியர்களை தற்போது தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறினார். 53 உக்ரேனியர்கள் காணாமல் போனதாக நேபாள சுற்றுலா காவல்துறை தங்களுக்குத் தெரிவித்ததாக உக்ரேனின் வெளிவிவகார அமைச்சகம் கூறியுள்ளது.
அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்த 142 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. தென் கொரியா, தென்னாப்பிரிக்கா, போர்ச்சுகல் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளும் காணாமல் போனதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |