பால் பவுடரில் நச்சு? திரும்பப் பெறும் பிரபல நிறுவனம்
பிரபல உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்ட்லே நிறுவனம், 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது நிறுவனத் தயாரிப்பான குழந்தைகளுக்கான பால் பவுடரை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
பால் பவுடரில் நச்சுப்பொருள்
நெஸ்ட்லே நிறுவனத்தின் தயாரிப்புகளான SMA, BBA, மற்றும் NAN உட்பட பல பால் பாவுடர் தயாரிப்புகள், பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்வீடன், ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் இத்தாலி உட்பட பல நாடுகளில் திரும்பப் பெறப்படுகின்றன.
விடயம் என்னவென்றால், செயற்கையாக தயாரிக்கப்படும் இந்த பால் பவுடர்கள் தாய்ப்பாலை ஒத்திருக்கவேண்டும் என்பதற்காக, arachidonic acid (ARA) oil என்னும் ஒரு அத்தியாவசிய கொழுப்பு அமிலம் (essential fatty acid) பால் பவுடரில் கலக்கப்படுகிறது.
பால் பவுடரில் கலக்கப்படும் இந்த ARA எண்ணெயில், செருலைட் (cereulide) என்னும் நச்சுப்பொருள் இருப்பது, வழக்கமான சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு பிரபல நிறுவனம் இந்த ARA எண்ணெயை விநியோகிக்கிறதாம்.

இந்த செருலைட் என்பது, பேசில்லஸ் சிரியஸ் (Bacillus cereus) என்னும் பாக்டீரியாவால் உருவாக்கப்படும் ஒரு நச்சுப்பொருளாகும்.
இன்னொரு முக்கிய விடயம், இந்த நச்சுப்பொருளை சூடாக்கினாலும் அது அழியாது (heat-stable toxin). அதாவது, கொதிக்கும் நீருடன் கலந்தாலும் இந்த நச்சு அழியாது. பால் பவுடர் தயாரிக்கும்போது, அதை பதப்படுத்தினாலும் (pasteurisation) அந்த நச்சு அழியாது என்பது ஒரு முக்கியப் பிரச்சினை.
இந்த செருலைட் கலந்த பாலை அருந்தினால், குழந்தைகளுக்கு தொடர்ச்சியான வாந்தி, வயிற்றுப்போக்கு, கடும் சோர்வு முதலான பல பிரச்சினைகள் ஏற்படும்.
ஆகவேதான், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த பால் பவுடர் தயாரிப்புகளை திரும்பப் பெறுவதாகவும், இதுவரை பால் பவுடரால் யாரும் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை என்றும், என்றாலும், குறிப்பிட்ட பேட்ச் பால் பவுடர் டின்களை திருப்பிக் கொடுத்துவிடுமாறும் நெஸ்ட்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |