பணயக்கைதிகளை காப்பாற்ற உதவினால் ரூ 42 கோடி வெகுமதி... நெதன்யாகு அறிவிப்பு
பணயக்கைதியுடன் இஸ்ரேல் திரும்பும் ஒவ்வொரு காஸா குடியிருப்பாளருக்கும் ரூ 42 கோடி வெகுமதி அளிக்க இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இது அரிய வாய்ப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் நெருக்கடிகளில் இருந்து வெளியேற விரும்புபவர்களுக்கு இது அரிய வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவரொருவர் பணயக்கைதி ஒருவரை மீட்டு வர முடிவு செய்தால், அவரின் குடும்பத்தினரை மொத்தமாக பாதுகாப்பாக வெளியேற்ற இஸ்ரேல் உதவும் என்றும், அத்துடன் 5 மில்லியன் அமெரிக்க டொலர் ( இந்திய மதிப்பில் ரூ 42 கோடி) வெகுமதியாக அளிக்கப்படும் என்றும் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் முடிவு உங்களினுடையது என்றும், கண்டிப்பாக இஸ்ரேல் அனைத்து பணயக்கைதிகளையும் மீட்கும் என்பதும் உறுதி என்றார்.
பணயக்கைதிகள் தொடர்பாக இஸ்ரேலில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், போரில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், பணயக்கைதிகள் குறித்து நெதன்யாகு கவலை கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், வேறுவழியின்றி 5 மில்லியன் டொலர் வெகுமதியை அவர் அறிவித்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
தண்டனையை அனுபவிப்பார்கள்
போர் நிறுத்த ஒப்பந்தங்கள் இலக்கை எட்டாத நிலையில், தற்போது பணயக்கைதிகளை விடுவிக்கும் பேச்சுவார்த்தையும் கைவிடப்பட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்கா மற்றும் எகிப்து சம்பந்தப்பட்ட மத்தியஸ்த முயற்சிகளில் இருந்து பின்வாங்குவதாக இந்த மாதம் கத்தார் கூறியது.
ஆனால் 5 மில்லியன் டொலர் வெகுமதி அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், வழக்கமான கடும் மிரட்டல்களையும் நெதன்யாகு வெளிப்படுத்தியுள்ளார்.
பணயக்கைதிகளை பிடித்து வைத்திருக்கும், அவர்களுக்கு துன்பம் தரும் எவரும் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள். கண்டிப்பாக ஒவ்வொருவரையாக கண்டு பிடித்து பழி தீர்க்கப்படும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |