இரக்கமற்ற தாக்குதல் தொடரும்... கொக்கரிக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
லெபனானில் ஹிஸ்புல்லா படைகள் மீது இரக்கமற்ற தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார்.
இரக்கமற்ற தாக்குதல் தொடரும்
செப்டம்பர் மாத பிற்பகுதியில் ஹிஸ்புல்லா படைகளுக்கும் இஸ்ரேலுக்குமான மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் மீது மிக மோசமான தாக்குதலை ஹிஸ்புல்லா படைகள் முன்னெடுத்ததன் அடுத்த நாள் இந்த மிரட்டலை நெதன்யாகு விடுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய ராணுவ முகாம் மீது ஹிஸ்புல்லா படைகள் முன்னெடுத்த ட்ரோன் தாக்குதலில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர், மேலும் 60 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், பெய்ரூட் உட்பட லெபனானின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஹிஸ்புல்லா படைகள் மீது இரக்கமற்ற தாக்குதல் தொடரும் என்றே நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஆனால், மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 பேர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, பதில் தாக்குதல் முன்னெடுத்ததாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 23ம் திகதி முதல் லெப்னான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், இதுவரை 1,315 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. உண்மையில் இறப்பு எண்ணிக்கை பலமடங்காக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
பல ஆயிரக்கணக்கான மக்கள்
லெபனானில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிராமம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், குறைந்தது 21 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் - லெபனான் எல்லையில் இருந்து ஹிஸ்புல்லா படைகளை துரத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பெஞ்சமின் நெதன்யாகு நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால் கடந்த ஓராண்டாக ஹிஸ்புல்லா படைகளின் ரோக்கட் வீச்சுக்கு பயந்து வெளியேறியுள்ள பல ஆயிரக்கணக்கான மக்களை மீண்டும் அப்பகுதிக்கு வரவழைக்க வேண்டும் என்றே இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
ஆனால் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவே, தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |