குழந்தைகளுக்கும் கருணைக்கொலை செய்ய அனுமதி! சட்டங்களை விரிவுபடுத்தும் பிரபல நாடு
நெதர்லாந்து அரசு 1 முதல் 12 வயது வரையிலான நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை உள்ளடக்கிய கருணைக்கொலை சட்டங்களை நீட்டிக்க முன்வந்துள்ளது.
கருணைக்கொலை சட்டங்களை விரிவுபடுத்தும் நெதர்லாந்து
உலகில் முதன்முதலாக கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்கிய நாடான நெதர்லாந்து, தற்போது ஒரு வயது முதல் பன்னிரெண்டு வயது வரையிலான நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் உதவியுடன் மரணம் என்ற விருப்பத்தை அனுமதிக்கும் வகையில் அதன் தற்போதைய கருணைக்கொலை சட்டங்களை விரிவுபடுத்துவதாக தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து 2002-ல் கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்கியது. இந்தச் சட்டம், எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தாங்கமுடியாமல் அவதிப்படும் நோயாளிகளின் வாழ்க்கையை சட்டப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர மருத்துவர்களை அனுமதிக்கிறது.
யாருக்கு பொருந்தும்?
டச்சு அரசாங்கத்தின் படி, இந்த புதிய விதிமுறைகள் ஆண்டுதோறும் 5 முதல் 10 குழந்தைகளுக்கு பொருந்தும். குறிப்பாக தாங்க முடியாத நோய் தொடர்பான துன்பங்களைத் தாங்கும் குழந்தைகள், குணமடைவதற்கான வாய்ப்புகள் இல்லை நிலையில் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சையும் நிவாரணம் அளிக்கத் தவறிவிட்ட நிலை என்ற கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
முன்னதாக, 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கருணைக்கொலை சாத்தியம் என்று சட்டம் அனுமதித்தது.
பிராந்திய கருணைக்கொலை மறுஆய்வு வாரியங்களின் தரவுகளின்படி, 2022-ல் 12 முதல் 16 வயதுக்குட்பட்ட ஒரே ஒரு பிள்ளைக்கு மட்டுமே கருணைக்கொலை செய்யப்பட்டது.
நெதர்லாந்தில், கருணைக் கொலையை மேற்கொள்ளும் மருத்துவர்கள் கடுமையான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். நோயாளியின் தகவலறிந்த சம்மதத்தைப் பெறுதல் மற்றும் மறுஆய்வுக் குழுவிடம் செயல்முறையைப் புகாரளிப்பது ஆகியவை இதில் அடங்கும்.