தாலிபான்கள் ஆட்சியில் பிரதமர் இவர் தான்: வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைக்கப் போகும் தலைவர்களின் பட்டியலை தாலிபான்கள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தாலிபான்கள் இயக்கத்தின் தலைவர் முகமது ஹசன் அகுந்த் புதிய இடைக்கால அரசின் பிரதமராக இருப்பார் என்றும் அப்துல் கனி பரதார் துணைப் பிரதமராக இருப்பார் என்றும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
உள்விவகார அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவல்களை தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகிதீன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறிய நிலையில், அங்கு அரசாங்கத்தைக் கட்டமைப்பதற்காக ஒரு சிறப்புக் குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழு தனது பரிந்துரைகளை தாலிபான்களுக்கு வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில், தாலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா முகமது ஹசன் பிரதமராகவும் அப்துல் கனி பரதார் துணைப் பிரதமராகவும் இருப்பார் என்று தாலிபான்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மேலும், உள்விவகார அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி, பாதுகாப்பு அமைச்சராக முல்லா ஒமரின் மகன் முல்லா முகமது யாகூப், நிதியமைச்சராக ஹெதாயத்துல்லா பத்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, இன்னொரு துணைப் பிரதமராக அப்துல் சலாம் ஹனாபி நியமிக்கப்பட்டுள்ளார்.
தாலிபான் இயக்கத்தை நிறுவியவர்களில் முக்கியமானவரான முல்லா ஹஸ்ஸன் அகுந்த்,. அந்த இயக்கத்தின் சக்திவாய்ந்த மற்றும் உச்ச அதிகாரம் கொண்ட குழுவான ரெஹ்பாரி ஷூராவின் தலைவராக 20 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.
2001ல்ஆப்கானிஸ்தானில் அதிகாரம் செலுத்தி வந்த தாலிபானை அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் துருப்புகள் வெளியேற்றும்போது தாலிபான் அமைச்சரவையில் அமைச்சராக ஹஸ்ஸன் அகுந்த் இருந்தார்.
[]
ஆயுத குழுவின் தலைவர் என்பதை விட தாலிபான்களால் போற்றக்கூடிய சமயத் தலைவராகவே ஹஸ்ஸன் அகுந்தை அவர்கள் கருதினர். பிரித்தானிய அரசு தடை விதித்துள்ளவர்களின் ஆவணங்களின்படி 58 வயதாகும் முல்லா ஹஸ்ஸன் அகுந்த் கந்தஹார் மாகாணம், மியால் பகுதி, ஸ்பின் போத்லாக் மாவட்டத்தில் பிறந்தவர் எனவும்,
நூர்சாய் பழங்குடியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லா ஹஸ்ஸன் அகுந்த், ஐ.நா பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பவர். அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலிலும் இவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.