பிரான்சில் இனி இதற்கெல்லாம் கட்டுப்பாடு? விரைவில் அறிமுகமாகும் புதிய விதிகள்
பிரான்ஸ் 1959ஆம் ஆண்டுக்குப் பிறகு மழையில்லாத வறண்ட குளிர்காலத்தை சந்தித்துள்ளது.
பொதுவாக, குளிர்காலத்தில்தான் நல்ல மழை இருக்கும், தொடர்ந்து வரும் வெப்பமான மாதங்களுக்கான நிலத்தடி நீர் அப்போதுதான் பூமிக்குள் இறங்கும்.
ஆனால், இம்முறை அப்படி இல்லை. நாட்டின் பல பகுதிகளில் 31 நாட்களாக குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் மழை இல்லை.
அறிமுகம் செய்யப்பட இருக்கும் விதிகள்
ஆகவே, விரைவில் தண்ணீர் பயன்பாடு தொடர்பில் புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த விடயம் தொடர்பில், பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சரான Christophe Béchu பிப்ரவரி 27 அன்று கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.
அந்தக் கூட்டத்தில், நாட்டின் ஒவ்வொரு பகுதி குறித்தும் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
இப்போதே தண்ணீரை சேமிக்க முயற்சி செய்யுமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக கார் கழுவுதல், நீச்சல் குளங்களில் தண்ணீர் நிரப்புதல் போன்ற விடயங்களை கவனமாக கையாளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
50 அம்சங்களுடன் பெரிய தண்ணீர் திட்டம்
அடுத்த சில நாட்களில் 50 அம்சங்களுடன் பெரிய தண்ணீர் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ள Christophe, குறிப்பாக, மழைநீர் தொடர்பில் சில கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். நல்ல தண்ணீரை கழிவறைக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, இனி மழைநீரை பயன்படுத்த அனுமதி வழங்கப்படலாம்.
அத்துடன், மக்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்தவேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.