'நடப்பதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்' மியான்மருடனான முக்கிய உறவுகளுக்கு தடை விதித்த நியூசிலாந்து
மியான்மரில் இராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மியான்மருடனான அனைத்து உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ உறவுகளுக்கும் இடைகால தடை விதிப்பதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.
மியான்மரில் கடந்த திங்கட்கிழமை அரசு தலைவர் ஆங் சான் சூகி உட்பட அனைத்து முக்கிய அரசியல் தலைவர்களையும் சிறைப்பிடித்த இராணுவம், அடுத்த ஒரு வருடத்துக்கு நாடு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என அறிவித்தது.
இராணுவத்தின் இந்த அதிரடியான நடவடிக்கைக்கு மியான்மர் குடிமக்கள் உட்பட அணைத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், மியான்மரின் நட்பு நாடான நியூசிலாந்து மியான்மர் இராணுவத்துக்கு கண்டனம் தெரிவித்து, அந்நாட்டுடனான அனைத்து உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ தோடர்புகளையும் தற்காலிகமாக தடை செய்வதாக அறிவித்துள்ளது.
மேலும், மியான்மரின் இராணுவத் தலைவர்கள் மீது, வரும் வாரத்தில் முறைப்படுத்தப்படவுள்ள பயணத் தடையை அமல்படுத்தவுள்ளதாகவும் நியூசிலாந்து அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி, மியான்மருக்கான நியூசிலாந்தின் உதவித் திட்டங்களுக்கும் தற்காலிகமாக தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை வெளியிட்ட பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் "மியான்மரில் நடப்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். மியான்மரில் ஒரு ஜனநாயகத்தை கட்டியெழுப்ப பல ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் திடீரென இராணுவத்தின் தலைமையிலான சர்வாதிகார நடவடிக்கையை பார்த்து ஒவ்வொரு நியூசிலாந்து குடிமக்களும் அதிர்ச்சிக்குள்ளானோம்" என்றார்.
மேலும், மியான்மர் இராணுவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து "நியூசிலாந்திலிருந்து எங்களால் முடிந்ததை அனைத்தையும் செய்வோம்" என்றும் மியான்மரின் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவை சிறப்பு அமர்வு நடத்த நியூசிலாந்து விரும்புவதாகவும் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறினார்.