இலங்கையர் நிகழ்த்திய தாக்குதல்: புதிய சட்டத்தையே அறிமுகம் செய்ய நியூசிலாந்து முடிவு
நியூசிலாந்தில் இலங்கையர் ஒருவர் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில், ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்தார்கள். பொலிசார் சுட்டதில் அவர் உயிரிழந்தார்
சுட்டுக்கொல்லப்பட்ட அந்த நபர் ஒரு இலங்கையர் என்றும், தனது தீவிரவாத கருத்துக்களுக்காக ஏற்கனவே பொலிசாருக்கும் அரசியல்வாதிகளுக்கும் அறிமுகமானவர் என்றும் தகவல் வெளியானது.
2011ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து மாணவர் விசாவில் நியூசிலாந்து வந்த அந்த நபர் இருமுறை கத்திகளை வாங்கியதாலும், ஐ எஸ் தொடர்பான வீடியோக்களை வைத்திருந்ததாலும், தீவிரவாதக் கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாலும் தீவிரவாத கண்காணிப்பு பட்டியலில் அவரை சேர்த்த நிலையில், 2016 முதல் சாதாரண உடை அணிந்த பொலிசார் பொலிசார் அவரை தீவிரமாக கண்காணித்துவந்துள்ளார்கள்.
ஆனால், ஏற்கனவே இப்படி தீவிரவாத கண்காணிப்பின் கீழ் இருந்த ஒரு நபரை சிறையில் வைக்காமல் சுதந்திரமாக நடமாட விட்டது ஏன் என ஒரு கேள்வி எழுந்துள்ளது.
விடயம் என்னவென்றால், ஒருவர் தீவிரவாதக் கருத்துக்களைக் கொண்டவர் என்பதற்காக மட்டுமே அவரைக் கைது செய்து நீண்ட காலத்துக்கு சிறையிலேயே வைத்திருக்கும் வகையிலான சட்டங்கள் இல்லை.
ஆனால், அப்படி ஒரு சட்டம் இல்லாததே இப்படிப்பட்ட நபர்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கிறது என்ற ஒரு விமர்சனமும் எழுந்துள்ளது.
இந்நிலையில், விரைவில், தீவிரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிடுவதே குற்றம், அதாவது தாக்குதல் வரை பொறுத்திருக்காமல், ஒருவர் தாக்குதல் நடத்த திட்டமிட்டாலே அவரைக் கைது செய்யும் வகையில் ஒரு சட்டத்தை முடிந்தவரை விரைவாக கொண்டு வர இருப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.
சொல்லப்போனால், ஏற்கனவே The Counter Terror Legislation Bill என்னும் ஒரு சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தீவிரவாத தாக்குதல் நடத்துவது மட்டுமல்ல, தாக்குதல் நடத்த திட்டமிடுவதும், ஆயத்தமாவதும் கூட குற்றம்தான்.
ஆகவே, நாடாளுமன்றம் கூடியதும் அந்த மசோதா தொடர்பான வேலையை முடிக்க இருப்பதாக தெரிவித்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், இந்த மாத இறுதிக்குள் அந்த மசோதாவை சட்டமாக்க இருப்பதாக சூளுரைத்துள்ளார் .