நியூசிலாந்தில் 6 மாதத்திற்கு பின் கொரோனாவால் முதல் பலி!
நியூசிலாந்தில் கொரோனாவால் ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்பானது வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மீண்டும் நியூசிலாந்து தொடர்பிலான செய்தி முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. ஏனெனில் நேற்று அந்நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இலங்கையர் ஒருவர் 6 பேரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தலைப்பு செய்தியானது.
தற்போது 6 மாதத்திற்கு பின்னர் ஏற்பட்டுள்ள கொரோனா மரணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மிக தீவிர பரவல் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி ஆக்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவருக்கு செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்தே உயிரிழந்துள்ளார். நியூசிலாந்தில் கொரோனாவால் ஏற்படும் 27ஆவது உயிரிழப்பு இதுவாகும். பிப்ரவரி 16 ஆம் திகதிக்கு பிறகு, நிகழும் முதல் கொரோனா பலி இது என்பது முக்கிய விடயமாகும்.
உயிரிழந்த மூதாட்டியின் வீட்டில் ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஆறு மாதத்தில் முதல்முறையாக ஆகஸ்ட் மத்தியில் உள்ளுரிலிருந்து கொரோனா பரவியது அங்கு உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து இதுவரை, 782 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் திரும்பபெறப்பட்டபோதிலும் ஆக்லாந்தில் தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
இது குறித்து பிரதமர் Jacinda Ardern கூறுகையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் எவ்வளவு முக்கியமானது என்பதை ஆறு மாதத்தில் முதல்முறையாக நிகழ்ந்துள்ள இந்த உயிரிழப்பு நமக்கு உணர்த்துகிறது என கூறியுள்ளார்.