பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 136 மாணவர்கள் விடுவிப்பு!
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 136 பள்ளி மாணவர்கள் மூன்று மாதனங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகளால் மாணவர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நைஜீரியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நைஜர் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து கடந்த மே மாதம் 30-ஆம் திகதி 150-க்கும் மேற்பட்ட மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்றால், பிணைத் தொகையை வழங்க வேண்டும் என பயங்கரவாதிகள் கூறினர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளிக்கூட நிர்வாகம் இணைந்து ஒரு குறிப்பிட்ட தொகையை தயார் செய்தது.
ஆனால், அந்தத் தொகை போதுமானதாக இல்லை எனக் கூறி மாணவர்களை விடுவிக்க பயங்கரவாதிகள் மறுத்துவிட்டனர். அத்துடன் பிணைத்தொகையை வழங்கச் சென்ற ஒரு நபரையும் பயங்கரவாதிகள் கடத்தி வைத்துக் கொண்டனர்.
இதற்கிடையே, பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட மாணவர்களில் 6 பேர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதாக அண்மையில் செய்தி வெளியானது. இது கடத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.
கடத்தப்பட்டவர்களில் 15 மாணவர்கள் ஜூன் மாதம் தப்பித்து சென்றதாக கூறப்பட்டது.
இதையடுத்து பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள மாணவர்களை விடுவிக்க உதவும்படி நைஜீரிய அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், பிணைக் கைதிகளாக வைத்திருந்த 136 மாணவர்களையும் பயங்கரவாதிகள் விடுவித்து விட்டதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் அனைவரும் பலவீனமாகவும், ஆரோக்கியமற்ற நிலையிலும் இருந்ததால் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். அதேவேளையில் மாணவர்களை மீட்க பயங்கரவாதிகளுக்கு பிணைத்தொகை வழங்கப்பட்டதா? என்பது குறித்து விளக்கமளிக்க அவர் மறுத்துவிட்டார்.
நைஜீரியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை 1,000-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.