இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு: ஆசிய நாடுகளில் விமான நிலையச் சோதனை தீவிரம்
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பரவியுள்ள ஆபத்தான நிபா வைரஸ் பாதிப்பு, ஆசியாவின் சில நாடுகளில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலையங்களில்
இதன் காரணமாக, முக்கியமான சில விமான நிலையங்களில் வைரஸ் பாதிப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்தில் மேற்கு வங்கத்திலிருந்து விமானங்கள் வரும் மூன்று விமான நிலையங்களில் பயணிகளைப் பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது.

நேபாளமும் காத்மாண்டு விமான நிலையத்திலும், இந்தியாவுடனான பிற தரைவழி எல்லைப் பகுதிகளிலும் வரும் பயணிகளைப் பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது.
டிசம்பர் மாதம் முதல் மேற்கு வங்கத்தில் இரண்டு பேர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன; பாதிக்கப்பட்டவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 196 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடும். இதற்கு சிகிச்சையளிக்க எந்த தடுப்பூசியோ அல்லது மருந்தோ இல்லாததால், இதன் இறப்பு விகிதம் 40 முதல் 75 சதவீதம் என்றே கூறப்படுகிறது.
நிபா வைரஸ் பன்றிகள் மற்றும் பழங்கள் உண்ணும் வௌவால்கள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடும். கெட்டுப்போன உணவு மூலமாகவும் இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவலாம்.
கோவிட் மற்றும் ஜிகா போன்ற நோய்க்கிருமிகளுடன் நிபா தொற்றையும் உலக சுகாதார நிறுவனம் முதல் பத்து முன்னுரிமை நோய்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட நான்கு முதல் 14 நாட்கள் வரை இருக்கும் என்றும், இந்த வைரஸால் பாதிக்கப்படும் நபர்களுக்குப் பலவிதமான அறிகுறிகள் தென்படும் என்றும், அல்லது சில சமயங்களில் எந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை எனவும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கிராமத்தின் பெயரிலிருந்தே
ஆரம்ப அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி ஆகியவை இருக்கலாம். சிலருக்கு, இதைத் தொடர்ந்து மயக்கம், நினைவாற்றல் குழப்பம் மற்றும் நிமோனியா போன்றவையும் ஏற்படலாம்.
முதன்முதலில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் பாதிப்பு, 1998-ஆம் ஆண்டு மலேசியாவில் பன்றி வளர்க்கும் விவசாயிகளிடையே ஏற்பட்டது. பின்னர் அது அண்டை நாடான சிங்கப்பூருக்கும் பரவியது.

அந்த வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கிராமத்தின் பெயரிலிருந்தே அதற்கு அந்தப் பெயர் வந்தது. நிபா பாதிப்பால் அப்போது 100-க்கும் மேற்பட்ட்ரோர் மரணமடைந்தனர்.
அத்துடன் வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பத்து லட்சம் பன்றிகள் கொல்லப்பட்டன. இச்சம்பவம் அப்போது விவசாயிகளுக்கும் கால்நடை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் கணிசமான பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |