பாஜகவுக்கு திடீர் பதற்றத்தை உருவாக்கியுள்ள நிதிஷ் குமார்: வெளியாகியுள்ள வீடியோ
இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களில், பிரதமர் மோடி சார்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இருக்கைகளைக் கைப்பற்றியுள்ளது. என்றாலும், பாரதிய ஜனதா கட்சிக்கு என்று பார்த்தால், 240 இருக்கைகள்தான் கிடைத்துள்ளன. அதாவது, அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஆகவே, கூட்டணிக்கட்சிகள் உதவியுடன் தான் ஆட்சி அமைக்கவேண்டும் என்ற கட்டாயம் பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
டெல்லிக்குச் செல்லும் எதிரெதிர் அணியினர்
ஆட்சியமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சிகளான தெலுகு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவும், ஜனதா தளம் கட்சியைச் சார்ந்தவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரும் டெல்லி செல்கிறார்கள்.
இந்நிலையில், நிதிஷ் குமார் பயணிக்கும் அதே விமானத்தில், எதிரணியான இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவும் பயணிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதுவும், நிதிஷ் குமாரின் இருக்கைக்கு பின் இருக்கையிலேயே தேஜஸ்வி யாதவ் அமர்ந்துள்ளதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
VIDEO | Bihar CM Nitish Kumar (@NitishKumar) and RJD leader Tejashwi Yadav (@yadavtejashwi) are travelling in the same flight from #Patna to #Delhi.
— Press Trust of India (@PTI_News) June 5, 2024
Leaders of NDA and INDIA bloc are expected to hold meetings in Delhi later today.
(Source: Third Party) pic.twitter.com/l9GrFfeolk
விடயம் என்னெவென்றால், பீகாரில் நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி கடந்த ஆண்டு வரை நடந்தது. அதில் நிதிஷ் குமார் முதல்வராக இருந்த நிலையில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்தார்.
அதன்பிறகு அந்த கூட்டணி முறிந்தது. அதாவது கடந்த ஆண்டு பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் நிதிஷ் குமார் தான் முக்கிய பங்கு வகித்தார். அதன்பிறகு திடீரென்று நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறினார். மேலும், பீகாரில் காங்கிரஸ் மற்றும் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவுடன் கைகோர்த்து மீண்டும் முதல்வரானார்.
ஆக, தற்போதும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் நிதிஷ் குமார் கூட்டணியை முறிப்பதில் வல்லவர். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, அதன்பிறகு இப்போது பாஜக கூட்டணி என மாறி மாறி முதல்வர் பதவியில் உள்ளார் அவர்.
இதற்கிடையில், இந்தியா கூட்டணியின் தலைவர்கள் அவரை தொடர்பு கொண்டு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படிப்பட்ட ஒரு சூழலில், நிதிஷ் குமார் தனது முன்னாள் கூட்டாளியான தேஜஸ்வி யாதவுடன் ஒரே விமானத்தில் டெல்லி செல்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகிவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |