பாரசீக வளைகுடா, ஓமன் துறைமுகங்கள் பாதுகாப்பாக இருக்காது: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
ஈரானிய துறைமுகங்களை முடக்குவதாக அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்புக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வியும், அமெரிக்காவின் முடிவும்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாத நிலையில், ஈரானிய அதிகாரிகள் தங்கள் நாடு அணு ஆயுதங்களை வைத்து இருப்பது தொடர்பான தங்களது விருப்பங்களில் இருந்து வெளியேறாததே பேச்சுவார்த்தை தோல்விக்கு காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள அனைத்து ஈரானிய துறைமுகங்களையும் அமெரிக்கா இராணுவம் இடைமறிக்க போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரான் எச்சரிக்கை
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவின் அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடல்சார் வணிக பாதுகாப்பு குறித்து ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில் அமெரிக்க படைகள் தங்களின்(ஈரானின்) துறைமுகங்களை இடைமறித்து அச்சுறுத்தினால் பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடாவில் துறைமுகங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்காது என்று எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை ஈரான் கடல்சார் சுதந்திரத்தை பொறுத்தே இருக்கும் என்றும் ஈரானிய அதிகாரிகள் விவரித்துள்ளனர்.
அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து 100 டொலர்கள் என்ற இலக்கை தாண்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |