வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான்
அமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கப் போவதில்லை என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கடற்படை முற்றுகை
இது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல் என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், முக்கியத்துவம் வாய்ந்த அந்த நீரிணை வழியைக் கடக்க முயன்ற இரண்டு சரக்கு கப்பல்களைத் தங்கள் கடற்படை கைப்பற்றியதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பாகிஸ்தானின் முயற்சிகளை ஈரான் நிர்வாகம் பாராட்டுவதாக வெளிவிவகார செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மத்தியஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று, அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் அவகாசம் அளிக்கும் பொருட்டு, போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் செவ்வாயன்று தெரிவித்திருந்தார்.
ஆனால், கடற்படை முற்றுகையின் மூலம் மீறப்படாத பட்சத்தில் மட்டுமே முழுமையான போர் நிறுத்தம் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் புதன்கிழமை தெரிவித்தார்.
மேலும், போர்நிறுத்தம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் இனி கப்பல் போக்குவரத்திற்கு வாய்ப்பளிப்பது என்பது சாத்தியமில்லை என்றார்.
மூன்று நாட்களுக்குள்
இதனிடையே, வளைகுடாவில் கடல்வழிப் போக்குவரத்தின் மீதான சமீபத்திய தொடர் தாக்குதல்கள் இருந்தபோதிலும், அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த மூன்று நாட்களுக்குள் நடைபெறக்கூடும் என ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுவதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட எட்டுப் பெண்களை விடுவிக்குமாறு தான் ஈரானை வலியுறுத்தியதை அடுத்து, அவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றும் திட்டத்தை ஈரான் நிறுத்திவிட்டதாக ட்ரம்ப் கூறினார்.
ஆனால், அப்படி ஒரு விவகாரம் நடந்ததில்லை என்றும், ட்ரம்ப் குறிப்பிடும் செய்தியானது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்று கூறியதுடன், பொய்ச் செய்திகளை ட்ரம்ப் பரப்புவதாகவும் ஈரானின் நீதித்துறை விளக்கமளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |