பாலஸ்தீன தேசத்திற்கு வாய்ப்பே இல்லை... அறிவித்த இஸ்ரேல் பிரதமர்
பாலஸ்தீன தேசம் என்பது இனி உருவாகப் போவதில்லை என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் செய்துள்ளார்.
இடம் எங்களுக்கு சொந்தம்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரு பெரிய குடியேற்றத் திட்டத்திற்கான கையெழுத்திடும் விழாவில் உரையாற்றும் போது நெதன்யாகு இதை பதிவு செய்துள்ளார்.
பாலஸ்தீன தேசம் என்பது இருக்காது என்ற எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றப் போகிறோம், இந்த இடம் எங்களுக்கு சொந்தம் என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எங்கள் பாரம்பரியம், எங்கள் நிலம் மற்றும் எங்களது பாதுகாப்பையும் உறுதி செய்வோம் என தெரிவித்துள்ள நெதன்யாகு, நகரத்தின் மக்கள்தொகையை இரட்டிப்பாக்கப் போகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
E1 எனப்படும் சுமார் 12 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் குடியிருப்புகளைக் கட்டமைக்க வேண்டும் என இஸ்ரேல் நீண்ட காலமாக போராடி வந்துள்ளது. ஆனால் சர்வதேச எதிர்ப்பின் காரணமாக இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக முடங்கிப் போயிருந்தது.
E1 பகுதியானது ஜெருசலேம் மற்றும் இஸ்ரேலிய குடியேற்றமான மாலே அடுமிம் இடையே அமைந்துள்ளது. மட்டுமின்றி, பாலஸ்தீன பிரதேசத்தின் வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் பாதைகளும் அருகே அமைந்துள்ளது.
கடந்த மாதம், இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், மிகவும் சிக்கலான இந்த நிலத்தில் சுமார் 3,400 வீடுகளைக் கட்டும் திட்டங்களை ஆதரித்தார். ஆனால் அவர் அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் கிளம்பியது.
இந்த தீர்வு மேற்குக் கரையை இரண்டாகப் பிளக்கும், மேலும் அடுத்தடுத்த பாலஸ்தீன அரசுக்கு இருத்தலியல் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் பதிலளித்திருந்தார்.
உரிய நடவடிக்கை
உண்மையில், 1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலின் அனைத்து குடியேற்றங்களும் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகவே கருதப்படுகின்றன. மட்டுமின்றி, நெதன்யாகுவின் இந்த அறிவிப்பின் பின்னணியில், அவருக்கான அரசியல் காரணங்கல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல மேற்கத்திய அரசாங்கங்கள், இந்த மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க விரும்புவதாக அறிவித்துள்ளன.
பெருந்துயரமான காஸா போரில் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்திற்கு உடன்படத் தவறினால், உரிய நடவடிக்கையை எடுப்போம் என்று பிரித்தானியா கூறியுள்ளது. ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் பல குழுக்களை இதுவரை இஸ்ரேல் தாக்கி போரை நீட்டித்து வருகிறது.
காஸாவை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிர வலதுசாரி அமைச்சர்களால் சமீப மாதங்களாக முன்வைக்கப்படுகிறது.
போருக்கு பின்னர் காஸாவை மொத்தம் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த நிலையில், வெற்றிப்பரிசாக காஸாவை ட்ரம்பிடம் நெதன்யாகு ஒப்படைக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |