அமைதிக்கான நோபல் பரிசு... நோர்வேயை ட்ரம்ப் எதிரி நாடாக அறிவிக்கவும் வாய்ப்பு
அமைதிக்கான நோபல் பரிசை இந்த முறை கைப்பற்றும் வகையில் திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
அமைதிக்கான நோபல் பரிசு
இந்தியா - பாகிஸ்தான் உட்பட ஏற்கனவே 7 போர்களை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ள ட்ரம்ப், இஸ்ரேல் - காஸா போரையும் தாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும், அடுத்து உக்ரைன் - ரஷ்யா என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு இந்த முறை யாருக்கு என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை இஸ்ரேல் - காஸா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இதன் பொருட்டு ஜனாதிபதி ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணப்பட இருக்கிறார். மட்டுமின்றி, எகிப்தில் நடக்கும் காஸா சமாதான உடன்படிக்கை கையெழுத்தாகும் நிகழ்விலும் கலந்துகொள்ள இருக்கிறார்.
ஆனால் டொனால்ட் ட்ரம்பிற்கு இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாவிட்டால், அமெரிக்க-நோர்வே உறவுகளில் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர்கொள்ள நோர்வே அரசியல்வாதிகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.
மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்குவது என்பது குறித்து ஏற்லனவே ஒரு முடிவை எட்டியுள்ளதாக நோர்வே நோபல் குழு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
மட்டுமின்றி, பெரும்பாலான நோபல் நிபுணர்களும் நோர்வே பார்வையாளர்களும் ட்ரம்பிற்கு பரிசு வழங்கப்படுவது மிகவும் சாத்தியமில்லை என்று நம்புகிறார்கள்.
அமைதிக்கான நோபல் பரிசை இந்த முறை கட்டாயம் கைப்பற்ற வேண்டும் என்பதாலையே, 7 போர்களை தாம் தலையிட்டு நிறுத்தியதாக ட்ரம்ப் ஒவ்வொரு ஊடக சந்திப்பின் போதும் கூறி வருகிறார்.
அதிக வரிகளை சுமத்தலாம்
ஆனால் பகிரங்கமாகவே இந்த முறை அவர் புறக்கணிக்கப்பட்டால் ட்ரம்ப் எவ்வாறு நடந்துகொள்வார் என்ற அச்சம் நோர்வே மக்கள் மற்றும் அரசியவாதிகளிடையே தீயாக பரவியுள்ளது.
நோர்வே எதையும் எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. நோபல் குழு ஒரு சுயாதீன அமைப்பு மற்றும் பரிசுகளை நிர்ணயிப்பதில் நோர்வே அரசாங்கத்திற்கு எந்தத் தலையீடும் இருப்பதில்லை.
ஆனால் இது ட்ரம்பிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே பல நிபுணர்களின் கருத்தாக உள்ளது. கடந்த ஜூலை மாதம் நோர்வே நிதி அமைச்சர் மற்றும் முன்னாள் நேட்டோ பொதுச் செயலாளரான Jens Stoltenberg-ஐ தொடர்பு கொண்டு அமைதிக்கான நோபல் பரிசு தொடர்பில் ட்ரம்ப் விவாதித்துள்ளார்.
மட்டுமின்றி, ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய ட்ரம்ப், 7 போர்களை தாம் தலையிட்டு நிறுத்தியுள்ளதால், எல்லோரும் தமக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் என உலகத் தலைவர்கள் மத்தியில் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், ட்ரம்பிற்கு இந்த முறை நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை என்றால், அவர் நோர்வே மீது அதிக வரிகளை சுமத்தலாம் என்றும் நேட்டோ அமைப்பிற்காக அதிகம் செலவிட வேண்டும் என்ற அழுத்தம் தரலாம் என்றும், நோர்வேயை ஒரு எதிரி நாடாக அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் பலர் கருதுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |