உக்ரைனுக்கு எதிராக போரிட்ட மொத்த வடகொரிய வீரர்களும் என்ன ஆனார்கள்... வெளிவரும் புதிய தகவல்
குர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து முன்னர் போரிட்ட வட கொரிய வீரர்கள் ஜனவரி நடுப்பகுதிக்குப் பிறகு போரில் ஈடுபடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரிய உளவுத்துறை
கடும் பின்னடைவை அடுத்து வட கொரிய வீரர்கள் விலகியிருக்கலாம் என்ற உக்ரைனின் கருத்தையே தற்போது தென் கொரிய உளவுத்துறையும் உறுதி செய்துள்ளது.
ஜனவரி நடுப்பகுதியில் இருந்து, ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் களமிறக்கப்பட்ட வட கொரிய வீரர்கள் போரில் ஈடுபடவில்லை என்று தெரிகிறது என்றே தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை தெரிவித்துள்ளது.
பல உயிரிழப்புகளை அவர்கள் எதிர்கொண்டுள்ளதும் ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் உறுதியான விவரங்கள் இன்னும் சேகரிக்கப்படவில்லை என அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் தரப்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில், குர்ஸ்கில் களமிறக்கப்பட்டிருந்த வட கொரிய வீரர்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்ததையடுத்து திரும்பப் பெறப்பட்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகள், தென் கொரிய மற்றும் உக்ரைனிய உளவுத்துறை அமைப்புகள் உள்ளிட்டவை தெரிவிக்கையில், மேற்கு குர்ஸ்க் பகுதியில் சண்டையிடும் ரஷ்யப் படைகளுக்கு ஆதரவாக 10,000க்கும் மேற்பட்ட துருப்புக்களை வடகொரியா களமிறக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
தயாரெடுத்து வருவதாக
குறித்த குர்ஸ்க் பகுதியானது கடந்த ஆகஸ்டு மாதம் உக்ரைன் படைகளால் அத்துமீறி கைப்பற்றப்பட்டது. ஆனால் வடகொரிய இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது தொடர்பில் ரஷ்யாவும் வடகொரியாவும் இதுவரை உறுதி செய்யவில்லை.
இந்த நிலையிலேயே உக்ரைன் துருப்புகளிடம் பல வடகொரிய வீரர்கள் உயிருடன் சிக்கினர். அத்துடன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் வடகொரிய வீரர்களின் விசாரணை காணொளியையும் வெளியிட்டு உறுதி செய்தார்.
ஆனால் தற்போது, உக்ரைனில் இன்னொரு படைப்பிரிவை களமிறக்க வடகொரியா தயாரெடுத்து வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. மேலும், புடினுக்கான புத்தாண்டு வாழ்த்து கடிதத்தில் கிம் ஜோங் உன் ரஷ்ய ஜனாதிபதி புடினைப் பாராட்டி, உக்ரைன் போர் தொடர்பில் முக்கிய கருத்தொன்றை பதிவு செய்திருந்தார்.
அதில், 2025 ஆம் ஆண்டு ரஷ்ய இராணுவமும் மக்களும் நவ-நாசிசத்தை தோற்கடித்து ஒரு பெரிய வெற்றியை அடையும்" ஆண்டாக இருக்கும் என கிம் ஜோங் உன் குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |