பணக்கார குழந்தைகளை கடத்தும் வடகொரிய மக்கள்: அதிர்ச்சியளிக்கும் பின்னணி
வடகொரியாவில் சென்ற மாதம் ஆறு வயது சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டாள்...
சிறிது நேரத்தில் அவளது பெற்றோருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தான் அவர்களது குழந்தையை கடத்தி வைத்திருப்பதாகவும் பிணைத்தொகை கொடுத்தால் மட்டுமே அவளை விடுவிக்கமுடியும் என்றும் கூறினார் பேசிய நபர்.
ஆனால், பொலிசார் அந்த அழைப்பை ட்ரேஸ் செய்து சம்பந்தபட்ட நபரைப் பிடித்துவிட்டார்கள். கடத்தியவர் யார் என்று பார்த்தபோது அவர் ஒரு கேங் லீடரோ ஒரு பிரபல கிரிமினல் கடத்தல்காரானோ அல்ல. ஒரு சாதாரண நபர். அவர் கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 55 பவுண்டுகள்.
இதேபோல், கடந்த மே மாதம் ஒரு ஆறு வயது சிறுவன் பள்ளியிலிருந்து கடத்தப்பட்டான். அவனைக் கடத்தியவர் அவனது பெற்றோரிடம் கேட்ட பிணைத்தொகை 600 பவுண்டுகள்.
வடகொரியாவில் சமீபத்தில் இதேபோல் நான்கு கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. சிக்கியவர்களை பொலிசார் விசாரித்தபோது ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளிவந்தது. அது என்னவென்றால், இவர்கள் அனைவருமே சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் ஏழைகள். இப்படி பணக்காரக் குழந்தைகளைக் கடத்தினால் அவர்கள் பெற்றோரிடமிருந்து பணம் பறிக்கலாம், ஏதாவது சாப்பிடலாம் என்ற நோக்கத்துக்காக மட்டுமே அவர்கள் இந்த குழந்தைகளை கடத்தியுள்ளது தெரியவந்தது. ஆம், வடகொரியா கொரோனா வந்தால் சமாளிக்க முடியாது என்பதற்காக பயந்து தன் எல்லைகளை முற்றிலுமாக மூடிவிட்டது.
எரிபொருள் இல்லை, விவசாயம் இல்லை, மருந்துகள் இல்லை, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு என மோசமான நிலையில் உள்ளது வடகொரியா. இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்திய புகைப்படங்களில் உடல் மெலிந்திருப்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டின.
அவருக்கு ஏதோ உடல் நலப் பிரச்சினை என பேச்சு எழ, இல்லை, அதிபர் நாட்டில் உணவுப்பற்றாக்குறை இருப்பதால் உணவைக் குறைத்துவிட்டார், ஆகவேதான் அவர் மெலிந்திருக்கிறார் என அரசே விளக்கம் கொடுத்தது.
ஆகவே, உணவுக்காக பணக்காரர்களின் குழந்தைகளை கடத்தி, பிணைத்தொகை பெற்று, அதை வைத்து சாப்பிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறார்கள் வடகொரிய மக்கள், பாவம்தான்!